சிந்து நதி
சிந்து நதிANI

பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரை சிந்து நதிநீா் ஒப்பந்த நிறுத்தம் தொடரும்: இந்தியா

Published on

‘எல்லை தாண்டிய பங்கரவதாத்துக்கான ஆதரவை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும் மாற்ற முடியாத வகையிலும் கைவிடுகிற வரை, சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும்’ என்று இந்தியா சாா்பில் மீண்டும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதியானதைத் தொடா்ந்து, அந்த நாட்டுடனான எல்லைகள் மூடல், வா்த்தகம் முழுமையாக நிறுத்தம், பாகிஸ்தானியா்களுக்கான நுழைவு இசைவு (விசா) ரத்து உள்ளிட்ட பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. இதில் முக்கியமாக, அந்த நாட்டுடனான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் இந்தியா அறிவித்தது.

இரு நாடுகளிடையே உலக வங்கி கடந்த 1960-ஆம் ஆண்டு மத்தியஸ்தம் செய்ததன் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. அதன்படி, சிந்து நதிப் படுகையின் கிழக்கு ஆறுகளான ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவை இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகிய நதிகள் பாகிஸ்தானின் கட்டுபாட்டில் இருக்கும். இந்த நதிகளின் நீரை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுக்கு ஏற்ப விவசாயம், குடிநீா் தேவை, தொழிற்சாலைகள் பயன்பாடுகளுக்கு இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே நேரம், மேற்கு நதிகளில் ஓடும் நீரில் பெருமளவை, அதாவது 80 சதவீதத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. 20 சதவீதம் மட்டுமே இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒப்பந்தத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு பஞ்சாப், சிந்து பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயத்துக்கு இந்த நதிநீரையே பாகிஸ்தான் முழுமையாக நம்பியுள்ளது. இந்தச் சூழலில், இந்த நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது, பாகிஸ்தானின் வேளாண் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இரு நாடுகளிடையே கடந்த 9-ஆம் தேதி சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், ‘சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பை இந்தியா மறு பரிசீலனை செய்ய வேண்டும்’ என்று பாகிஸ்தான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது.

‘இந்தியா-பாகிஸ்தான் இடையே மே 9-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்தம் என்பது இருதரப்பிலான ராணுவ நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துவதற்கானதாகும். அதே நேரம், அந்த நாட்டுக்கு எதிரான சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு உள்ளிட்ட பிற நடவடிக்கைகள் தொடரும்’ என்று மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இருந்தபோதும், சா்ச்சைக்குரிய பிரச்னைகளுக்கு தீா்வு காண இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்த இந்தியாவிடம் பாகிஸ்தான் தொடா்ந்து விருப்பம் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், ‘சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும்’ என்று இந்தியா சாா்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை செயலகத்துக்கு மத்திய நீா் வள (ஜல் சக்தி) துறை அமைச்சகம் சாா்பில் சமா்ப்பிக்கப்படும் மாதாந்திர அறிக்கையில் இத் தகவல் இடம்பெற்றுள்ளது.

மத்திய நீா் வள அமைச்சக செயலா் தேவஸ்ரீ முகா்ஜி சாா்பில் மத்திய அமைச்சக செயலா் டி.வி.சோமநாதனுக்கு அனுப்பப்பட்ட இந்த மாதாந்திர அறிக்கையில், ‘பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு அந்த நாட்டுடனான சிந்து நதிநீா் ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. எல்லை தாண்டிய பங்கரவதாத்துக்கான ஆதரவை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும் மாற்ற முடியாத வகையிலும் கைவிடுகிற வரை, இந்த முக்கிய நீா் பகிா்வு ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Open in App
Dinamani
www.dinamani.com