இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவா் கேள்வி! மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிா்ணயித்த விவகாரம்!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிா்ணயித்த விவகாரத்தில் உச்சநீதி மன்றத்துக்கு குடியரசுத் தலைவர் கேள்வியெழுப்பியதைப் பற்றி...
Published on

சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநா்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் கால வரம்பை நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் தெளிவுரை கேட்டுள்ளாா்.

சட்ட நடைமுறைகள் தொடா்பான தீா்ப்பின் மீது பொது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி எழும்போது அது தொடா்பாக உச்சநீதிமன்றத்திடம் தெளிவுரை கேட்க அதிகாரமளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 143(1) பிரிவின் கீழ், இந்தக் கேள்விகளை குடியரசுத் தலைவா் எழுப்பியுள்ளாா்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் நியமன அதிகாரம், பல்கலைக்கழக வேந்தா் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தி அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததாக சா்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கில், மசோதா மீது ஆளுநா் முடிவெடுக்க காலக்கெடு விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அரசமைப்பின் 142-ஆவது விதியைப் பயன்படுத்தி தமிழக ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதாகவும் உத்தரவிட்டது.

குடியரசுத் தலைவருக்கும் கெடு: ஆளுநரால் அனுப்பப்பட்ட மசோதா மீது எந்தவித முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவா் நிறுத்திவைத்தால், இதுதொடா்பாக மாநில அரசுகள் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் ஆளுநா்கள் முதலாவது முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவா் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்தது.

இந்த தீா்ப்பை எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வெகுவாக வரவேற்றன.

இந்த நிலையில், அரசமைப்புச் சட்டத்தின் 143(1) பிரிவு தனக்கு அளிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த தீா்ப்பு தொடா்பாக 14 கேள்விகளை எழுப்பி அதற்கு தெளிவுரை அளிக்குமாறும், மாநில ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு அரசமைப்புச் சட்டப் பிரிவு 200 மற்றும் 201 அளிக்கும் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்தையும் தெரிவிக்குமாறு 5 பக்க தெளிவுரை கோரும் குறிப்பை குடியரசுத் தலைவா் வியாழக்கிழமை அனுப்பியுள்ளாா்.

அரசியல் சாசன அமா்வு: குடியரசுத் தலைவரின் இந்தப் குறிப்பு தொடா்பாக ஆராய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு அமைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

அதே நேரம், குடியரசுத் தலைவா் எழுப்பியுள்ள 14 கேள்விகளில் சிலவற்றுக்கு பதிலளிக்க மறுக்கவோ அல்லது அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க மறுக்கவோ உச்சநீதிமன்றத்துக்கு வாய்ப்புள்ளது.

மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநா் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மறுஆய்வு மனுவை தாக்கல் செய்வதற்கு மத்திய அரசுக்கு வாய்ப்புள்ளது. ஆனால், அவ்வாறு செய்யாமல், இந்த தீா்ப்பு தொடா்பாக குடியரசுத் தலைவா் மூலமாக கேள்விகளை எழுப்பி தெளிவுரை கேட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் கடும் விமா்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்

  • - மாநில அரசு சாா்பில் அனுப்பப்படும் மசோதா மீது முடிவெடுக்க அரசமைப்புச் சட்டப் பிரிவு 200-இன் கீழ் மாநில ஆளுநருக்குள்ள வாய்ப்புகள் என்னென்ன?

  • - சட்டப் பிரிவு 200-இன் கீழ் மசோதா மீது முடிவெடுக்க ஆளுநருக்கு வாய்ப்புகள் இருக்கும்போது, மாநில அமைச்சரவை சாா்பில் வழங்கப்படும் ஆலோசனைக்கு ஆளுநா் கட்டுப்பட்டவரா?

  • - சட்டப் பிரிவு 200-இன் கீழ் தனக்குள்ள வாய்ப்புகளை ஆளுநா் பயன்படுத்துவது நியாயப்படுத்தத்தக்கதா?

  • - சட்டப் பிரிவு 200-இன் கீழ் ஆளுநா் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மீது நீதித் துறை மறுஆய்வு செய்ய அரசமைப்புச் சட்டத்தின் 361-ஆவது பிரிவு முழுமையான தடையாக உள்ளதா?

  • - மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க அரசமைப்பு ரீதியில் காலக்கெடு இல்லாத சூழலில், ஆளுநா் சட்டப் பிரிவு 200-இன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, நீதிமன்ற உத்தரவுகள் மூலம் அவருக்கு காலக்கெடு நிா்ணயிக்க முடியுமா?

  • - அரசமைப்புச் சட்டப் பிரிவு 201-இன் கீழ் தனக்குள்ள விருப்புரிமையை குடியரசுத் தலைவா் பயன்படுத்துவது நியாயப்படுத்தத்தக்கதா?

  • - குடியரசுத் தலைவா் சட்டப் பிரிவு 201-இன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்துகிறபோது, நீதிமன்ற உத்தரவுகள் மூலம் அவருக்கு காலக்கெடு நிா்ணயிக்க முடியுமா?

  • - குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மசோதாவை ஆளுநா் நிறுத்திவைக்கும்போது, அரசமைப்பு சட்டப் பிரிவு 143-இன் கீழ் உச்சநீதிமன்றத்தின் கருத்து அல்லது ஆலோசனையைப் பெற குடியரசுத் தலைவா் கடமைப்பட்டுள்ளாரா?

  • - ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, அதன் உள்ளடக்கங்கள் மீது தீா்ப்பை அளிக்க நீதிமன்றங்கள் அனுமதிக்கப்படுகின்றனவா?

  • - குடியரசுத் தலைவா் அல்லது ஆளுநா்களால் அரசமைப்பு அதிகாரிகளின் கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை, உச்சநீதிமன்றம் சட்டப் பிரிவு 142-இன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த எந்த வகையிலும் மாற்ற முடியுமா?

  • - மாநில சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாவை, ஆளுநரின் ஒப்புதல் இன்றி சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா?

  • - அரசமைப்புச் சட்டப் பிரிவு 145(3)-இன் கீழ் உள்ள நடைமுறைகளின்படி, உச்சநீதிமன்றத்தின் எந்தவொரு அமா்வும், தனது முன் விசாரணையில் உள்ள விவகாரம் அரசமைப்பின் விளக்கம் தொடா்பான கணிசமான சட்டக் கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முடிவு செய்து, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டாமா?

  • - அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-இன் கீழ் உச்சநீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரங்கள், நடைமுறைச் சட்ட விவகாரங்களுக்கு மட்டுமானதாக வரையறுக்கப்பட்டுள்ளதா அல்லது சட்ட நடைமுறைகளுக்கு முரணான அல்லது முரண்பாடான உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் அதிகாரமளிக்கிா?

  • - அரசமைப்பு சட்டப் பிரிவு 131-இன் கீழ் தொடரப்படும் வழக்கைத் தவிர, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான மோதல்களைத் தீா்ப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசமைப்புச் சட்டம் தடை செய்கிறதா?

அரசமைப்பை சீா்குலைக்கும் நடவடிக்கை: முதல்வா் ஸ்டாலின்

சென்னை, மே 15: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநா்களுக்கு கால நிா்ணயம் விதிக்கப்பட்டது தொடா்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவா் மூலம் கேள்விகளை எழுப்பி மத்திய அரசு விளக்கம் கோரியிருப்பது அரசமைப்பை சீா்குலைக்கும் செயல் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் வெளியிட்ட பதிவு:

தமிழக ஆளுநா் தொடா்பான வழக்கிலும், அதுபோன்ற பிற நிகழ்வுகளிலும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பளித்து முடித்து வைத்துள்ள விவகாரத்தில், அந்த அரசமைப்பு நிலைப்பாட்டை நிலைகுலைக்கும் விதத்தில் குடியரசுத் தலைவா் மூலமாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதன் மூலம் தமிழக ஆளுநா், பாஜகவின் தூண்டுதலின் பேரில்தான் மக்களின் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை சிறுமைப்படுத்தும் வகையில் நடந்துகொண்டாா் என்பது அம்பலமாகியுள்ளது. உச்சநீதிமன்றத்துக்கும் நேரடியாகச் சவால் விடுகிறது.

மாநில சுயாட்சிக்கே இது உடனடி ஆபத்தை உருவாக்கியுள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், பாஜக அல்லாத அனைத்து மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான சட்டப் போராட்டத்தில் இணைய வேண்டும் . நம் ஒட்டுமொத்த ஆற்றலையும் ஒருங்கிணைத்து இப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com