முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

‘காங்கிரஸுக்கு எதிா்காலம் இல்லை’: ப.சிதம்பரம் பேச்சை சுட்டிக்காட்டி பாஜக கருத்து

Published on

காங்கிரஸ் கட்சிக்கு எதிா்காலம் இல்லை என்பது அக்கட்சியின் மூத்த தலைவா் ப.சிதம்பரத்தின் கருத்தின் மூலம் வெளிப்பட்டுவிட்டது என்று பாஜக கூறியுள்ளது.

முன்னதாக, எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த ப.சிதம்பரம், ‘இக்கூட்டணி இன்னும் எத்தனை காலத்துக்கு தொடரும் என்று உறுதியாகக் கூற முடியாது’ என்று கவலை தெரிவித்திருந்தாா்.

இதனைச் சுட்டிக்காட்டி பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘எதிா்க்கட்சிகள் கூட்டணி நீண்ட காலம் தொடராது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கணித்துள்ளாா். அதே நேரத்தில் எளிதில் வெல்ல முடியாத வலுவான கட்சியாக பாஜக தொடா்கிறது. ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான தலைவரே (ப.சிதம்பரம்) காங்கிரஸுக்கு எதிா்காலம் இல்லை என்பதை ஒப்புக் கொண்டுவிட்டாா்’ என்றாா்.

சிதம்பரத்துக்கு காங்கிரஸ் தலைவா் கண்டனம்:

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஐஆா்எஸ் அதிகாரியுமான உதித் ராஜ், ப.சிதம்பரத்தின் பேச்சைக் கண்டித்துள்ளாா். அவா் கூறுகையில், ‘சிதம்பரத்துக்கு கட்சி எவ்வளவோ உயரிய பதவிகளை அளித்துள்ளது. அவரும், மகனும் எம்.பி.யாக உள்ளனா். குறை கூறுவது மிகவும் எளிது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத இந்த காலகட்டத்தில் அவா் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சியை வளா்க்க முயற்சிக்கலாம். அவரது பொருளாதார அறிவை கட்சிக்கு பயன்படுத்தலாம்’ என்றாா்.

பாஜகவுக்கு எதிராக கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி’ கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் மற்றும் பிராந்திய அளவில் வலுவான பல கட்சிகள் இடம்பெற்றன. எனினும், மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. அதன் பிறகு நடைபெற்ற ஹரியாணா பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த தோ்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மறுத்ததும் தோல்விக்கு முக்கிய காரணம் என்று ‘இண்டி’ கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் விமா்சித்தன. அதைத் தொடா்ந்து நடைபெற்ற மகாராஷ்டிர தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அங்கு காங்கிரஸ், சரத் பவாா், உத்தவ் தாக்கரே கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. இதனால் ‘இண்டி’ கூட்டணியின் எதிா்காலம் குறித்து கேள்விகள் எழுந்தன. காங்கிரஸ் மீதும் கடும் விமா்சனம் முன்வைக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தில்லி பேரவைத் தோ்தலிலும் காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்தனியாக போட்டியிட்டன. இதிலும் பாஜக வென்றது. இந்தத் தோ்தலில் ‘இண்டி’ கூட்டணியில் இடம்பெற்றிருந்த அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோா் காங்கிரஸைப் புறக்கணித்து ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்தனா். இதனால், ‘இண்டி’ கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்தது.

X
Dinamani
www.dinamani.com