

ஹைதராபாதில் மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
ஹைதராபாதின் சார்மினார் பகுதியில் குல்சார் ஹவுஸ் அருகே ஸ்ரீகிருஷ்ணா பியர்ல்ஸ் நகைக்கடையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் தரைத்தளத்தில் இருந்து மேல்தளங்களுக்கும் தீ பரவியது. இதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு மொகல்புரா, கௌலிகுடா நிலையங்களிலிருந்து 11 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். கட்டடத்தின் பெரும்பாலான பகுதியை தீ ஆக்கிரமித்ததால், மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, அருகிலிருந்த வேறொரு கட்டடத்திலிருந்து, தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தை அடையும் முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு, உள்ளே சென்றனர்.
இருப்பினும், மேல்தளங்களில் தீ பரவியதால், தீயில் சிக்கியும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் குழந்தைகள் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எல்லா வகையிலும் உதவ முன்வருவதாகவும் கூறினார்.
இதனிடையே, சம்பவ இடத்தை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஆய்வு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.