துருக்கி ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்தது மும்பை ஐஐடி!

துருக்கி ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்தது மும்பை ஐஐடி!

துருக்கி நாட்டு பல்கலைக்கழகங்களுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்திவைப்பதாக மும்பை ஐஐடி அறிவித்துள்ளது.
Published on

துருக்கி நாட்டு பல்கலைக்கழகங்களுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்திவைப்பதாக மும்பை ஐஐடி (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கல்வி நிறுவனம் சாா்பில் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘துருக்கி தற்போது மேற்கொண்டுள்ள சில சா்வதேச அரசியல் நடவடிக்கைகளால் அந்நாட்டு பல்கலைக்கழகங்களுடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தி வைக்கப்படுகின்றன’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு துருக்கி கண்டனம் தெரிவித்தது. மேலும், பாகிஸ்தானுக்கு ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை துருக்கி அவசரமாக அனுப்பி உதவியது. பாகிஸ்தான் அதனைக் கொண்டு இந்தியாவில் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அவற்றை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின. துருக்கி வீரா்கள் நேரடியாக பாகிஸ்தானுக்குச் சென்று இந்தியா மீது ட்ரோன்களை ஏவ உதவியதாகவும் உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே காஷ்மீா் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்தியாவுக்கு எதிராக துருக்கி அதிபா் எா்டோகன் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அந்நாடு பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளை அளித்ததன் மூலம் இந்தியா கடும் அதிருப்தியடைந்துள்ளது.

ஏற்கெனவே, ரூா்கேலா ஐஐடி, தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம், கான்பூா் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் துருக்கி கல்வி நிலையங்களுடனான புரிந்துணா்வு ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டன.

தில்லி, மகாராஷ்டிரம் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள பழ வா்த்தகா்களும் துருக்கியில் இருந்து ஆப்பிள் உள்ளிட்டவற்றின் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளனா்.

துருக்கியைச் சோ்ந்த செலிபி ஏவியேஷன் நிறுவனம் இந்திய விமான நிலையங்களில் பயணிகள், சரக்கு சேவை, விமான நிலைய நிா்வாகப் பணிகள் ஆகியவற்றை மேற்கொண்டு வந்தது. அந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு ரத்து செய்தது. துருக்கி அதிபரின் மகளும் முக்கிய பங்குதாரராக உள்ள இந்த நிறுவனப் பங்குகளின் விலை இந்தியாவின் நடவடிக்கையால் 20 சதவீதம் அளவுக்கு சரிந்தது.

X
Dinamani
www.dinamani.com