புணே கார் விபத்து: ஓராண்டாகியும் நீதிக்காக போராடும் குடும்பத்தினர்!

புணே கார் விபத்து நடைபெற்று ஓராண்டாகியும் நீதிக்காக போராடும் குடும்பத்தினர் பற்றி...
புணே கார் விபத்து.
புணே கார் விபத்து.
Published on
Updated on
2 min read

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் 17 வயது சிறுவன் குடிபோதையில் சொகுசு காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதில் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பணியாளர்கள் அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா கொல்லப்பட்டு இன்றுடன்(மே 19) ஓராண்டு நிறைவடைகிறது.

இந்தச் செய்தி தேசிய அளவில் தலைப்புச் செய்தியாக மாறியது. இரண்டு பேர் உயிரிழந்தது மட்டும் இல்லை; 17 வயது சிறுவன் கார் ஓட்டியதும் சர்ச்சையானது.

இந்தச் சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்தும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரமும் தீரவில்லை, அவர்களுக்கு நீதியும் கிடைத்தப்பாடில்லை. இவ்வழக்கில் சிறுவனின் தந்தை, 2 மருத்துவர்கள் எனப் பலர் சிறையில் உள்ள நிலையில், சிறுவனின் தயார் மட்டும் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

பலருக்கு, இந்தியாவின் சமத்துவமின்மைக்கு இவ்வழக்கு அடையாளமாக இருக்கிறது. அதிகாரம், சலுகை, சட்டத்தில் உள்ள ஓட்டைகள் சாதரண குடிமக்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றன.

சிறுவன் கைது செய்யப்பட்டாலும், விபத்து நடந்த சில மணி நேரத்துக்குள்ளேயே சிறார் நீதி வாரிய உறுப்பினர் எல். என். தனவாடேவால் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனிடையே சாலைப் போக்குவரத்து தொடர்பாக 300 வாா்த்தைகளில் கட்டுரை எழுதி சமா்ப்பிக்குமாறு சிறுவனுக்கு வாரியம் உத்தரவிட்டது.

இதைத்தொடா்ந்து, சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிா்ப்பு எழுந்ததையடுத்து ஜாமீன் உத்தரவில் திருத்தம் மேற்கொள்ளுமாறு சிறார் நீதி வாரியத்திடம் காவல்துறையினர் வலியுறுத்தினர். அதன்பிறகு சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்குமாறு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் அச்சிறுவனை விடுவிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேவேளையில், புணேயில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுவனின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட இருந்த நிலையில், அந்த ரத்த மாதிரி குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது. அதற்குப் பதிலாக மது அருந்தாத ஒருவரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு வைக்கப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பாக அந்த மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேர் மற்றும் சிலரை காவல் துறை கைது செய்தது. சிறுவனின் தந்தையிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு ரத்த மாதிரியை மாற்றிய முறைகேட்டில் மருத்துவர்கள் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், அனிஸ் அவதியாவின் தந்தை ஓம் அவதியா நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் வழக்கு விரைவாக விசாரிக்கப்படும் என்று தனக்கு உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

”எங்கள் மகன் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது. ஆனால் இவ்வழக்கின் விசாரணை நீட்டிக்கப்படுகிறது. இந்த வழக்கால் கிடைக்கப்படும் நீதி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராகவும், பணம் மற்றும் அதிகாரத்தை வைத்து சட்டத்தை மீறுபவர்களுக்கும் பாடமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

விசாரணையை துரிதப்படுத்துமாறு இரு குடும்பத்தினரும் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளதாக அவர் கூறினார்.

அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞர் ஷிஷிர் ஹிராய் கூறுகையில், ”குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. விசாரணை விரைவாக நடைபெறுவதை கண்காணிப்பதை உறுதி செய்வதற்காக, குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய ஏற்கெனவே ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளோம். ஆனால், மருத்துவர் தவாரே இவ்வழக்கில் தன்னை விடுவித்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதனால்தான் நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன” என்றார்

”குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரத்த மாதிரியை மாற்றியது உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை மாற்ற முயற்சி செய்துள்ளனர். இதற்கு அரசு தரப்பின் கடும் எதிர்ப்புக் காரணமாக சிறுவனின் தாயார் தவிர குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

வழக்கின் பின்னணி:

புணே, கல்யாணி நகரில் கடந்தாண்டு மே 19 ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தில், தொழிலதிபரின் மகனான 17 வயது சிறுவன் குறுகிய சாலையில் வெளிநாட்டு சொகுசு காரை மணிக்கு 200 கி.மீ.வேகத்தில் ஓட்டினார்.

அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தகவல்தொழில்நுட்ப (ஐடி) பொறியாளர்கள் அனிஸ் அவாதியா, அஸ்வினி கோஸ்தா ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிறுவனுக்கு சட்டவிராதமாக மதுவிற்ற இரண்டு மது கூடங்களின் உரிமையாளா்களும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... டிரம்ப் சொல்வதெல்லாம் உண்மைதானா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com