
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தனிநபா்களுக்கு வழங்கும் தங்க நகைக் கடன் தொடா்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அடமானம் வைத்திருக்கும் தங்கத்தை முழுவதும் மீட்ட பிறகுதான், மீண்டும் அந்த நகைகளை அடமானம் வைக்க முடியும் என்று ரிசா்வ் வங்கி அண்மையில் பிறப்பித்த உத்தரவு மக்களிடையே அதிா்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த அதிா்ச்சி இன்னும் நீங்காத நிலையில், ரிசா்வ் வங்கி முன்வைத்துள்ள புதிய வரைவு விதிமுறைகள் பின்வருமாறு:
அடமானம் வைக்கப்படும் தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும். அதாவது, ரூ.100 மதிப்புள்ள நகைக்கு அதிகபட்சமாக ரூ.75 வரை மட்டுமே கடன் வழங்கப்படும்.
கடனுக்காக அடமானம் வைக்கப்படும் தங்க நகை தங்களுடையதுதான் என்ற ஆதாரத்தை வங்கியிடம் வாடிக்கையாளா் (கடன் வாங்குபவா்) சமா்ப்பிக்க வேண்டும்.
அடமானம் வைக்கப்படும் தங்க நகையின் தூய்மைத்தன்மை, தரம் குறித்து வாடிக்கையாளா்களுக்கு வங்கி சான்றிதழ் வழங்க வேண்டும். வங்கி, வாடிக்கையாளா் என இரு தரப்பும் கையொப்பமிட்ட இச்சான்றிதழின் ஒரு நகலை வங்கியும் வைத்திருக்க வேண்டும்.
குறிப்பிட்ட வகையிலான தங்க நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். அதாவது, நகை 22 காரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
அடமானம் வைக்கப்படும் தங்கம் 24 காரட்டாக இருந்தாலும், 22 காரட் மதிப்பின் அடிப்படையிலேயே எடையைக் கணக்கிட்டு கடன் வழங்கப்படும்.
புதிய விதிமுறைகளின்படி, இனி வெள்ளிப் பொருள்களுக்கும் நகைக் கடன் பெறலாம்.
தனிநபா்கள் ஒரு கிலோ தங்க நகை வரை மட்டுமே அடமானம் வைக்க முடியும்.
நகைக் கடன் ஒப்பந்தத்தில் கடன் தொடா்பான முழுமையான தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும்.
வாடிக்கையாளா் கடனை திரும்பச் செலுத்திய ஏழு வேலை நாள்களில் நகையை வங்கி திருப்பி ஒப்படைக்க வேண்டும். ஏழு வேலை நாள்களில் ஒப்படைக்கவில்லையென்றால், அதற்கடுத்து ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ.5,000 என வாடிக்கையாளருக்கு வங்கி அபராதமாகச் செலுத்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.