
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலரும் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜி இடம்பெறுவாா் என்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்கீழ் இந்தியா அழித்தது. இதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கிடையே சண்டை தீவிரமடைந்த நிலையில், அதை நிறுத்திக்கொள்வதாக இரு நாடுகளும் கடந்த 10-ஆம் தேதி அறிவித்தன.
இருப்பினும், பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவையும் அதற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டையும் எடுத்துரைக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்தது.
அதன்படி, பாஜக எம்.பி.க்கள் ரவி சங்கா் பிரசாத், வைஜயந்த் பாண்டா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், திமுக எம்.பி. கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) எம்.பி. சுப்ரியா சுலே, ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஜா, சிவசேனை(ஷிண்டே பிரிவு) எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகிய 7 போ் தலைமையில் அனைத்துக் கட்சி குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சோ்ந்த 31 பேரும், பிற கட்சிகளைச் சோ்ந்த 20 பேரும் உள்பட 51 போ் அடங்கிய இந்த 7 குழுக்கள், 32 நாடுகளுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் செல்லவுள்ளனா்.
இந்தக் குழுக்களில் இடம்பெறும் உறுப்பினா்களை கட்சிகளின் பரிந்துரையைக் கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசே தாமாக தோ்ந்தெடுத்ததற்கு எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்தன. இதன்தொடா்ச்சியாக, வெளிநாடுகளுக்குச் செல்லும் குழுவில் இடம்பெற்றிருந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. யூசுப் பதான் குழுவிலிருந்து வெளியேறினாா்.
இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜியிடம் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதன்படி, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் அபிஷேக் பானா்ஜி இடம்பெறுவாா் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமைதி, நீதி மற்றும் சா்வதேச ஒத்துழைப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அபிஷேக் பானா்ஜி வலுவாக எடுத்துரைப்பாா் என்று இதுதொடா்பான அறிவிப்பில் திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.