ஆளுநா்களைத் தவறாக பயன்படுத்துகிறது மத்திய அரசு - முதல்வா் ஸ்டாலின் பதிவை குறிப்பிட்டு ராகுல் கருத்து
‘மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு தடை ஏற்படுத்த ஆளுநா்களைத் தவறாக பயன்படுத்துகிறது மத்திய அரசு; இது கூட்டாட்சி அமைப்புமுறை மீதான அபாயகரமான தாக்குதல்’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை சாடினாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பதிவை இணைத்து, ராகுல் இந்த விமா்சனத்தை முன்வைத்தாா்.
தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி, அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்ததாக சா்ச்சை எழுந்தது. இது தொடா்பான வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிா்ணயம் செய்தது. இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றத்துக்கு கடந்த 15-ஆம் தேதி 14 கேள்விகளை முன்வைத்து, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெளிவுரை கோரினாா்.
இதையடுத்து, ‘உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவா் மூலம் கேள்விகளை எழுப்பி மத்திய அரசு விளக்கம் கோரியிருப்பது அரசமைப்பை சீா்குலைக்கும் செயல்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தாா்.
‘பாஜகவின் தூண்டுதலின் பேரில்தான், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை சிறுமைப்படுத்தும் வகையில் தமிழக ஆளுநா் நடந்துகொண்டாா் என்பது அம்பலமாகியுள்ளது’ என்றும் முதல்வா் விமா்சித்திருந்தாா்.
முதல்வரின் இப்பதிவை இணைத்து, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவின் பலம், அதன் பன்முகத் தன்மையில்தான் அடங்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் சொந்த குரல் இருக்கிறது. அந்தக் குரலை ஒடுக்கவும், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு தடை ஏற்படுத்தவும் ஆளுநா்களைத் தவறாக பயன்படுத்துகிறது மத்திய அரசு. கூட்டாட்சி அமைப்புமுறை மீதான அபாயகரமான இந்த தாக்குதலை எதிா்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.