
புது தில்லி: வக்ஃப் என்பது ஒரு அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளில் வக்ஃப் என்ற ஒரு கருத்தாக்கமே இல்லை. மாறாக அறக்கட்டளைகளே உள்ளன. சாரிட்டி என்பது இந்து உள்பட அனைத்து மதங்களின் ஒரு அங்கம் எனறு வாதிட்ட மத்திய அரசு, வக்ஃப் திருத்தச் சட்டம் கொண்டு வந்தது ஏன் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளது.
அதாவது, வக்ஃப் தொடர்பாக, நாடு முழுவதும் பல சொத்துகளில் பிரச்னைகள் இருந்ததாகவும் பல இடங்களில் வக்ஃப் சொத்துகள் தொடர்பாகபல பிரச்னைகள் இருந்த நிலையில்தான் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. கோடிக்கணக்கான மக்களின் காவலன் மத்திய அரசு. அவர்களின் நிலங்களை காப்பதும் அரசின் கடமை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கை அடிப்படையில் உரிமை தந்திருந்தால் அதை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி வக்ஃப் வழக்கில் உச்ச நீதிமன்ற விசாரணையில் மத்திய அரசு வாதங்களை முன்வைத்துள்ளது.
வக்ஃப் வாரியம் என்பது மதச்சார்பற்ற அமைப்பு. அது மத சடங்கு சாராதவற்றைக் கையாள்கிறது. பதிவு பராமரிப்பு, கணக்கு தணிக்கை போன்ற மதம் சாராத பணிகளை வக்ஃப் வாரியம் கையாளுகிறது. ஆனால் இந்துசமய அறநிலையத் துறை என்பது, கோயில் சார்ந்த பணிகளையும் மேற்கொள்கிறது. இந்து அறநிலையத்துறை ஆணையர், கோயில் சார்ந்த செயல்கள், அர்ச்சகர் நியமனம் உள்ளிட்டப் பணிகளை செய்கிறார். வக்ஃப் என்பது மதம் சாராத பணிகளை கண்காணிக்கும் ஒரு மேற்பார்வைக் குழு என்று வாதத்தை முன்வைத்துள்ளது.
நாட்டில், முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பி 72 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில், 5 மனுக்களை தெரிவு செய்த உச்சநீதிமன்றம், இந்த வழக்குக்கு ‘மறுஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’ என்று தலைப்பிட்டு விசாரித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.