போரை நிறுத்தியதாக 8 முறை டிரம்ப் கருத்து; மோடி அமைதி காப்பது ஏன்? காங்கிரஸ்

அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்தை மோடி மறுக்காதது குறித்து காங்கிரஸ் கேள்வி...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கருத்தை பிரதமர் நரேந்திர மோடி மறுக்காதது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதல் முடிவுக்கு வருவதாக 4 நாள்களுக்கு பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்தனர்.

இதனிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை முன்வைத்து மோதலை நிறுத்தியதாக டிரம்ப் கருத்து தெரிவித்தார். டிரம்பின் கருத்துக்கு எதிர்க்கட்சிகளிடையே விமர்சனம் எழுந்த நிலையில், மோதல் குறித்து மட்டுமே அமெரிக்கா ஆலோசித்ததாகவும் வர்த்தகம் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும் இந்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்தது.

அதேபோல், இந்திய அதிகாரிகளை தொடர்புகொண்டு தாக்குதலை நிறுத்துமாறி பாகிஸ்தான் கெஞ்சியதால் மட்டுமே தாக்குதலை நிறுத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஆனால், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் மோதலை நிறுத்தியதாக டிரம்ப் கருத்து தெரிவித்து வருகிறார்.

வெள்ளை மாளிகையில் தென்னாப்பிரிக்க அதிபருடனான சந்திப்பின்போது, புதன்கிழமை மாலை பேசிய டிரம்ப், “வர்த்தகத்தை முன்வைத்து இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாகவும், பாகிஸ்தானில் சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள், மோடியும் சிறந்த மனிதர்” எனப் பேசியிருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:

“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை நிறுத்தியதாக கடந்த 11 நாள்களில் 8 முறை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரது நண்பரான பிரதமர் மோடியும் வெளியுறவுத் துறை அமைச்சரும் அமைதியாக இருக்கின்றனர். பிரதமர் மோடியை பாராட்டும் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபையும் பாராட்டுகிறார்.

இதன்பொருள் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே மட்டத்தில் இருக்கிறது என்பதுதான். இதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்?

ஆபரேஷன் சிந்தூரை நான்கு நாள்களில் தலையிட்டு முடித்ததாக டிரம்ப் கூறுவதைக் கேட்டு நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. பிரதமர் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். இந்த விவகாரத்தை திசைதிருப்பக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com