
உத்தரகண்டின் பித்தோராகர் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தால் இயக்கப்படும் முதல் எஃப்எம் வானொலி நிலையம் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.
இதனை ராணுவத்தின் மத்திய கட்டளையின் பொது அதிகாரி அனிந்தியா சென்குப்தா தொடங்கி வைத்தார். இதுகுறித்து வானொலி நிலையத்தின் மேலாளர் மணீஷ் சிங்கால் கூறுகையில், இந்திய ராணுவத்திற்கும் எல்லைப் பகுதி மக்களுக்கும் இடையே நல்லெண்ணத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.
ஆபரேஷன் சத்பாவனா'வின் கீழ் இயக்கப்படும் சமூக வானொலி நிலையத்திற்கு 'பஞ்ச்சுல் பல்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 88.4 என்கிற அலைவரிசையில் எஃப்எம் ஒலிபரப்பப்படும். இந்திய ராணுவத்தின் 'பஞ்ச்சுல் படைப்பிரிவின்' ராணுவ பொதுப் பள்ளியில் இருந்து இந்த வானொலி நிலையம் இயக்கப்படுகிறது.
வானொலி நிலையத்திலிருந்து 12 கிமீ சுற்றளவில் உள்ள மக்களால் வானொலியைக் கேட்க முடியும். உள்ளூர் வரலாறு, கலாசாரம், சமூகம் மற்றும் விவசாயம், தோட்டக்கலை போன்ற எல்லைப் பகுதி மக்களின் தொழில்களில் இதன் நிகழ்ச்சிகள் சிறப்பு கவனம் செலுத்தும்.
மேலும் தியாகிகள், துணிச்சலான வீரர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக மற்றும் கலாசாரத் துறைகளில் பணியாற்றியவர்களின் சாதனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் இது கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.