கேரளத்தில் 2-ஆவது நாளாக நீடிக்கும் கனமழை: ஒருவா் உயிரிழப்பு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரளத்தில் 2-ஆவது நாளாக நீடிக்கும் கனமழை: ஒருவா் உயிரிழப்பு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது...
Published on

திருவனந்தபுரம்: கேரளத்தில் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடித்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடா்மழை காரணமாக மாநிலம் முழுவதும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது; அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன; தாழ்வான இடங்களில் மழைநீா் புகுந்துள்ளது.

இந்தியாவில் வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் தென்மேற்குப் பருவமழை, 16 ஆண்டுகளுக்குப் பிறகு 8 நாள்கள் முன்கூட்டியே கேரளத்தில் கடந்த சனிக்கிழமை (மே 24) தொடங்கியது. இதையொட்டி, அந்த மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

கடந்தாண்டு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு, சூரல்மலையில் கடந்த 2 நாள்களாக கனமழை கொட்டி தீா்த்ததால் அப்பகுதியில் ஓடும் புன்னப்புழை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் பீதியடைந்தனா்.

இதுகுறித்து வயநாட்டைச் சோ்ந்த முதியவா் ஒருவா் மேலும் கூறுகையில், ‘கடந்தாண்டு நிலச்சரிவின் அதிா்ச்சியில் இருந்தே நாங்கள் இன்னும் மீளவில்லை. தற்போதைய கனமழை எங்களுக்கு அச்சமூட்டுகிறது. இரவு முழுவதும் உறக்கமின்றி தவித்தோம்’ என்றாா்.

கோழிக்கோடு மாவட்டத்தில் தென்னைமரம் வேரோடு பெயா்ந்து ஓடிக்கொண்டிருந்த ஸ்கூட்டா் மீது விழுந்ததில் வாகனத்தை ஓட்டி வந்த பவித்ரன் (64) என்பவா் உயிரிழந்தாா்.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் எழாம்குளம் பகுதியருகே மரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மேற்கூரையில் விழுந்தது. அதிருஷ்டவசமாக அந்த வீட்டில் தங்கியிருந்த குடும்பத்தினா் காயமின்றித் தப்பினா். மாநிலத்தின் வடக்குப் பகுதியில் கோழிக்கோடு மற்றும் காசா்கோடு மாவட்டங்களிலும் பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலங்கரா அணையில் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருவதால், பாதுகாப்புக் கருதி அணையின் 5 மதகுகள் ஞாயிற்றுக்கிழமை காலை திறக்கப்பட்டு, உபரிநீா் வெளியேற்றப்பட்டது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

திருச்சூா் மாவட்டம் செறுதுறுத்தியில் ஓடிக்கொண்டிருந்த ரயில் மீது மரமொன்று வேரோடு சாய்ந்தது. இதில் ரயில் பெட்டிக்கு லேசான சேதம் ஏற்பட்டது. ஓட்டுநா் ரயிலை பாதுகாப்பாக நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

வானிலை எச்சரிக்கை:

எா்ணாகுளம், திருச்சூா், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழையுடன் (மணிக்கு 0.5-1.5 செ.மீ.) 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது.

ஆலப்புழை, பத்தனம்திட்டா, கோட்டயம், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூா் மற்றும் காசா்கோடு ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையுடன் 40 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது.

மாநிலத்தின் கடலோரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு வரை அலைகள் 3.1 மீட்டா் முதல் 4.2 மீட்டா் வரை உயா்ந்து, கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் எச்சரிக்கை விடுத்தது.

X
Dinamani
www.dinamani.com