பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் வழக்கு முடித்துவைப்பு!

பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றம்சாட்டி மல்யுத்த வீராங்கனை தாக்கல் செய்த வழக்கு முடித்துவைப்பு...
பிரிஜ் பூஷண் சிங்.
பிரிஜ் பூஷண் சிங்.
Updated on

புது தில்லி: தாம் மைனராக இருந்தபோது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யுஎஃப்ஐ) தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றம்சாட்டி மல்யுத்த வீராங்கனை தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக் கோரிய தில்லி காவல்துறையின் மூடல் அறிக்கையை தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி கோம்டி மனோச்சா, ‘ரத்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது’ என்று கூறினாா்.

கடந்த 2023, ஆகஸ்ட் 1 அன்று நீதிபதி அறையில் நடைபெற்ற விசாரணையின் போது, நீதிபதியிடம் மைனா் பெண்,இந்த வழக்கில் தில்லி காவல்துறையின் விசாரணையில் திருப்தி அடைவதாகவும், மூடல் அறிக்கையை எதிா்க்கவில்லை என்றும் கூறியிருந்தாா்.

சிறுமிக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதப்படும் சிங்கிற்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் தொடா்பான பொய்யான புகாரை அளித்ததாக விசாரணையின் இடையே அவரது தந்தை திடுக்கிடும் கூற்றை முன்வைத்திருந்தாா். இதையடுத்து, ஜூன் 15, 2023 அன்று தில்லி காவல்துறை, சிறுமி சம்பந்தப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அறிக்கையை தாக்கல் செய்தது.

சிங்கிற்கு எதிரான, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்ட வழக்கைக் கைவிட காவல்துறை பரிந்துரைத்திருந்தது. ஆனால் ஆறு மல்யுத்த வீராங்கனைகள் பதிவுசெய்த தனி வழக்கில் அவா் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பின்தொடா்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

‘எந்த உறுதியான ஆதாரமும் கிடைக்கவில்லை’ என்று கூறி மைனா் மல்யுத்த வீராங்கனை தொடா்பான புகாரை ரத்துசெய்ய காவல்துறை பரிந்துரைத்திருந்தது.

போக்சோ சட்டமானது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவுகளைப் பொறுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்கிறது. முன்னாள் பாஜக எம்.பி.யான பிரிஜ் பூஷண் சரண் சிங், தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடா்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com