
2026 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் நக்சல் இயக்கம் முற்றிலும் அழிக்கப்படும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (மே 26) உறுதிபடத் தெரிவித்தார்.
இந்திய ராணுவத்துக்கோ, மக்களுக்கோ, எல்லைகளிலோ இனி யார் அச்சுறுத்தல் கொடுக்க நினைத்தாலும் அதற்கான கடும் விளைவை அவர்கள் சந்திக்கக் கூடும் எனவும் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரத்தை நான்தேட் பகுதியில் அமைச்சர் அமித் ஷா இன்று (மே 26) தொடங்கினார்.
அப்போது நாட்டின் பாதுகாப்பு குறித்தும் வளர்ச்சி குறித்தும் அமைச்சர் அமித் ஷா பேசினார்.
இதில், அமித் ஷா பேசியதாவது,
''இந்திய எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் அதன் மக்களைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நாட்டின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசமில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் வலுவான நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது.
2047-க்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதையில் நிதானமாகப் பயணித்து வருகிறோம். இதில், எங்களை நிலைகுலையச் செய்யும் எந்தவொரு முயற்சிகளுக்கும் கடுமையான பதிலடி இருக்கும்.
சமீபத்தில் உரி பகுதியில் நம்மைத் தாக்கினார்கள். அவர்களுக்கு சர்ஜிகல் ஸ்ட்ரைக் மூலம் பதிலடி கொடுத்தோம். புல்வாமா பகுதியில் தாக்குதல் நடத்தினார்கள். அவர்களுக்கு வான்வழித் தாக்குதல் கொடுத்தோம். சமீபத்தில் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்தியாவில் இருந்து நக்சல் இயக்கத்தை ஒழிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், மேலும், மார்ச் 31, 2026 க்குள் அதை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவருவதே எங்கள் இலக்கு.
சிவசேனை கட்சியின் மூத்த தலைவர் பாலாசாஹேப் தாக்கரே இருந்திருந்தால், ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் மோடியை அவர் கட்டியணைத்திருப்பார். ஆனால், பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்த வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட குழுவை தற்போதைய சிவசேனையினர் முட்டாள்தனமாக விமர்சிக்கின்றனர்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பாகிஸ்தானை பயங்கரவாதத்தில் இருந்து மீட்க வேண்டும்: மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.