
குஜராத் மாநிலம் வதோதராவில், பிரதமர் நரேந்திர மோடி இன்று வாகனப் பேரணியாக சென்றபோது, ராணுவ அதிகாரி சோஃபியா குரேஷியின் குடும்பத்தினர், மலர்களைத் தூவினர்.
குஜராத் மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, நிறைவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தும், தொடங்க வேண்டிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் இரண்டு நாள் அரசுப் பயணமாக மாநிலத்துக்கு வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்திய தரப்பில் விளக்கம் கொடுத்தவர்களில் இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷியும் ஒருவர்.
இந்தியா நடத்திய மிகப்பெரிய வெளிநாட்டு இராணுவப் பயிற்சியான 'படைகளின் பயிற்சி 18' என்ற பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய இராணுவக் குழுவை வழிநடத்திய முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் சோஃபியா குரேஷி.
இந்த நிலையில்தான், குஜராத்தில், நரேந்திர மோடியின் பேரணியில், ஒரு மேடையில் இருந்து, குரேஷியின் குடும்பத்தினர் மோடி மீது மலர்களைத் தூவி வரவேற்பு அளிக்கும் புகைப்படங்களும் விடியோக்களும் வெளியாகியுள்ளன. இது குறித்து குரேஷியின் சகோதரி கூறுகையில், நாட்டின் பெண்களின் முன்னேற்றத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்று பெருமிதத்துடன் கூறினார்.
சோஃபியா குரேஷி தற்போது எனது சகோதரி மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டின் பெண்களுக்கும் சகோதரி என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியை, குரேஷியின் பெற்றோரும் குடும்பத்தினரும் சந்தித்துப் பேசினர். அப்போது, எங்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார். நாங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டோம். பிரதமரை சந்தித்தது மிகவும் உணர்வுப்பூர்வமாக அமைந்துள்ளது. நாங்கள் முதல் முறையாக அவரைச் சந்தித்துள்ளோம் என்றார் குரேஷியின் தந்தை தாஜ் முகமது குரேஷி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.