
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மட்டும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரிலான செயலியில் முதலீடு செய்து ரூ.2 கோடி ஏமாந்திருப்பதாக சைபர் பிரிவில் புகார் தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் செய்யறிவில் உருவாக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் விடியோக்கள் புகைப்படங்களை கடந்த 5 - 6 மாதங்களாக இந்த செயலியில் பதிவேற்றி, நல்ல லாபம் கிடைக்கும் என்று மக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துளள்து.
டிரம்ப் ஹோட்டல் ரென்டல் என்ற செயலியைத் தொடங்கிய மோசடியாளர்கள், பணத்தை முதலீடு செய்தால், பெரிய அளவில் லாபம் கிடைக்கும், 100 மடங்கு லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தைக் கூறி பணத்தை முதலீடு செய்ய வைத்திருக்கிறார்கள்.
நாடு முழுக்க சுமார் 800 பேருக்கு வலை விரித்திருக்கும் இந்தக் கும்பல் சொன்னதை நம்பி ஒரு சிலர் ரூ.10 லட்சத்துக்கும் மேல் இதில் ஏமாந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், கர்நாடக மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், செயலி குறித்து மக்கள் புகார் அளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த செயலி தற்போது பொதுவெளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
செயலியில், யார் யார் எவ்வளவு முதலீடு செய்து, எவ்வளவு லாபம் ஈட்டியிருக்கிறார்கள் என்ற பொய் தகவல் ஒன்றை மோசடியாளர்கள் பதிவிட்டிருக்கிறார்கள். அதைப்பார்த்துதான் பலரும் ஏமாந்திருக்கிறார்கள்.
மேலும், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் வேலைகளை செய்தால், கூடுதல் தொகை வரவு வைக்கப்படும் என்றும் அதில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், அவை அனைத்தும் பொய் என்பது தெரிய வந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், இதில் ஏமாந்த பலரும் புகார் கொடுக்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதில் ஏமாந்த ஒருவர் கூறுகையில், முதலில் நான் நாள்தோறும் ரூ.30 முதலீடு செய்தேன். அவர்கள் அதற்கு வட்டி கொடுத்தார்கள். வட்டித் தொகை ரூ.300 ஆக ஆன பிறகு அதனை நாம் எடுத்துக் கொள்ளலாம். இப்படியே பணம் சரியாக வந்து கொண்டிருந்ததால் நான் பிறகு ரூ.5000 செலுத்தினேன். இப்படியே அது அதிகரித்து கடைசியாக ரூ.1 லட்சம் வரை செலுத்தினேன். பிறகுதான், என் பணத்தை எடுக்க வரி செலுத்த வேண்டும் என்றார்கள். அதையும் செலுத்திய பிறகும் பணம் கிடைக்கவில்லை என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.