ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாவை மீட்க முதல்வர் ஒமர் அப்துல்லா எடுத்த முக்கிய முடிவு!

ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாவை மீட்க முதல்வர் ஒமர் அப்துல்லா எடுத்த முக்கிய முடிவு பற்றி...
ஒமர் அப்துல்லா
ஒமர் அப்துல்லா ANI
Published on
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாவை மீட்க முதல்வர் ஒமர் அப்துல்லா முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

பஹல்காம், சோனாமார்க், குல்மார்க் மற்றும் ஸ்ரீநகர் உள்ளிட்ட பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள ஹோட்டலில் அடுத்தடுத்து அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இரண்டாவது முறை முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்ற பிறகு ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு வெளியே அமைச்சரவைக் கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தெற்கு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதால், ஜம்மு - காஷ்மீரில் மிகுந்த பதற்றம் நிலவியது.

இதனால், ஜம்மு - காஷ்மீர் செல்வதை சுற்றுலா பயணிகள் தவிர்த்து, தங்களின் பயணங்களை ரத்து செய்தனர். இதனால், சுற்றுலாத் தலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் குறைந்துள்ள நிலையில், சுற்றுலாவை மீட்க ஜம்மு - காஷ்மீர் முதல்வர் முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர், மாநில அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

தொடர்ந்து, பஹல்காமில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுடன் சுற்றுலாவை மீட்டெடுப்பது குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இதன்மூலம், காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடமென்றும், கவலை தேவையில்லை என்றும் நாட்டு மக்களுக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா உணர்த்த முயற்சிக்கிறார்.

தொடர்ந்து ஸ்ரீநகர், சோனமார்க், குல்மார்க் உள்ளிட்ட பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள ஹோட்டல்களிலும் அடுத்தடுத்து அமைச்சரவைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற ஒமர் அப்துல்லா, சுற்றுலாப் பயணிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்த தேசிய அளவிலான நிகழ்வுகளை காஷ்மீரில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com