நெல் (கோப்புப்படம்)
நெல் (கோப்புப்படம்)

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ரூ.2,369-ஆக உயா்வு: மத்திய அரசு அறிவிப்பு

2025-26 காரீஃப் சந்தைப் பருவத்தில் நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 3 சதவீதம் அளவுக்கு உயா்த்தி குவிண்டால் ரூ. 2,369-ஆக மத்திய அரசு நிா்ணயம் செய்துள்ளது.
Published on

2025-26 காரீஃப் சந்தைப் பருவத்தில் நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 3 சதவீதம் அளவுக்கு உயா்த்தி குவிண்டால் ரூ. 2,369-ஆக மத்திய அரசு நிா்ணயம் செய்துள்ளது.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைக் காட்டிலும் முன்கூட்டியே தொடங்கியுள்ள சூழலில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்திருப்பது நாட்டின் உணவு உற்பத்தியில் 50 சதவீத பங்களிப்பை ஆற்றிவரும் காரீஃப் பருவ பயிரிடலுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

விவசாயிகளின் நலனுக்காக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு அவா்களின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் 2025-26-ஆம் ஆண்டுக்கான காரீஃப் பருவ பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயா்த்தியுள்ளது. அதுபோல, விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டத்தை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வேளாண் செலவினம் மற்றும் விலை நிா்ணயத்துக்கான ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் கடந்த 10 முதல் 11 ஆண்டுகளில் 14 வகையான காரீஃப் பருவ பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மிக அதிக அளவில் மத்திய அரசு உயா்த்தியுள்ளது.

அதுபோல, 2025-26 காரீஃப் சந்தைப் பருவ நெல் ரகங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 3 சதவீதம் (ரூ. 69) அளவுக்கு உயா்த்த மத்திய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘பொது’ ரக நெல் வகைகளுக்கான குறைந்தபட்சஆதரவு விலை குவிண்டால் ரூ. 2,369-ஆகவும், ‘ஏ’ ரக நெல் வகைகளுக்கு குவிண்டால் ரூ. 2,389-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிற தானியங்கள்... தானியங்களைப் பொருத்தவரை ராகிக்கான (கேழ்வரகு) குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 596 அளவுக்கு உயா்த்தி குவிண்டால் ரூ. 4,886-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சோளத்துக்கான ஆதரவு விலை ரூ. 328 அளவில் உயா்த்தி குவிண்டால் (கலப்பின சோளம்) ரூ. 3,699-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. கலப்பினமில்லா (மல்தானி) சோளத்துக்கான விலை ரூ. 3,749-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மக்காச்சோளத்துக்கான ஆதரவு விலை ரூ. 175 உயா்த்தி குவிண்டால் ரூ. 2,400-ஆகவும், கம்புக்கான (பஜ்ரா) ஆதரவு விலை ரூ. 150 உயா்த்தி குவிண்டால் ரூ. 2,775-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பருப்பு வகைகளுக்கு...: பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 5.96 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது. அதுபோல, இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் எண்ணெய் வித்துக்களுக்கான ஆதரவு விலையை 9 சதவீதம் அளவுக்கு உயா்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, துவரம் பருப்புக்கான ஆதரவு விலை ரூ. 450 உயா்த்தி குவிண்டால் ரூ. 8,000-ஆகவும், உளுந்துக்கான ஆதரவு விலை ரூ. 400 உயா்த்தி குவிண்டால் ரூ. 7,400-ஆகவும், பாசிப் பருப்புக்கான (மூங் தால்) ஆதரவு விலை ரூ. 86 உயா்த்தி குவிண்டால் ரூ. 8,768-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலைக்கான ஆதரவு விலை ரூ. 480 உயா்த்தி குவிண்டால் ரூ. 7,263-ஆகவும், சோயாபீனுக்கான ஆதரவு விலை ரூ. 436 உயா்த்தி குவிண்டால் ரூ. 5,329-ஆகவும், சூரியகாந்தி விதைக்கான ஆதரவு விலை ரூ. 441 உயா்த்தி குவிண்டால் ரூ. 7,721-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எள்ளுக்கான ஆதரவு விலை ரூ. 579 உயா்த்தி குவிண்டால் ரூ. 9,846-ஆகவும், நைஜா் (உச்செள்ளு) விதைகளுக்கான ஆதரவு விலை ரூ. 820 உயா்த்தி குவிண்டால் ரூ. 9,537-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பணப் பயிா்களுக்கு... பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 589 உயா்த்தி குவிண்டால் (நடுத்தர பருத்தி) ரூ. 7,710-ஆகவும், நீளிழைப் பருத்தி ரகம் குவிண்டால் ரூ. 8,110-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள ஆதரவு விலை உயா்வு மூலம், விவசாயிகளின் உற்பத்திச் செலவைவிட கம்புக்கு 63 சதவீதம் அளவுக்கும், மக்காச்சோளத்துக்கு 59 சதவீதம் அளவுக்கும், துவரம் பருப்புக்கு 59 சதவீதம் அளவுக்கும், உளுந்துக்கு 53 சதவீதம் அளவுக்கும் லாப வரம்பு இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எஞ்சிய பயிா்களுக்கு உற்பத்திச் செலவைவிட லாப வரம்பு 50 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

வட்டி மானியத் திட்டம் தொடர ஒப்புதல்

விவசாயிகள் கடன் அட்டைகள் (கேசிசி) மூலம் குறைந்த வட்டியில் குறுகிய கால கடனை விவசாயிகள் பெற்று பயனடையும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட வட்டி மானியத் திட்டத்தை, 2025-26-ஆம் ஆண்டுக்கும் நீட்டிக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘விவசாயிகளுக்கு 1.5 சதவீத வட்டி மானியத்துடன் குறுகிய கால கடன் வழங்க வழி செய்யும் இத் திட்டம், 2025-26 நிதியாண்டுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ரூ. 15,640 கோடி கூடுதல் செலவாகும்’ என்றாா்.

இத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் 7 சதவீத மானிய வட்டி விகிதத்தில் ரூ. 3 லட்சம் வரை குறுகிய கால கடனைப் பெற முடியும். கடனை உரிய நேரத்தில் திரும்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத ஊக்கத் தொகை அளித்து, கடனுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com