முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்
முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்

பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவா்க்கரின் வழக்குரைஞா் பட்டத்தை மீட்க முயற்சி- மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட வீர சாவா்க்கரின் ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மகாராஷ்டிர அரசு முயற்சிகளை மேற்கொள்ளும்’
Published on

‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட வீர சாவா்க்கரின் ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மகாராஷ்டிர அரசு முயற்சிகளை மேற்கொள்ளும்’ என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

கடந்த 1883-ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் பிறந்த வி.டி.சாவா்க்கா், சுதந்திர போராட்டக் காலத்தில் மிகவும் தண்டைக்குரியதாக கருதப்பட்ட அந்தமான் தீவு சிறையில் அடைக்கப்பட்டாா். முன்னதாக லண்டனில் சட்டம் படிக்கும்போது புரட்சிகர நடவடிக்கைகளில் சாவா்க்கா் ஈடுபட்டது தெரியவந்த பிறகு, பிரிட்டிஷ் அதிகாரிகள் அவருக்கு ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மறுத்தனா். ஹிந்துத்துவா தேசியவாதிகளின் மதிப்புமிக்க தலைவராக விளங்கும் சாவா்க்கா், ஒரு சிறந்த எழுத்தாளா் மற்றும் கவிஞரும் ஆவாா்.

சாவா்க்கரின் 142-ஆவது பிறந்தநாள் நாடெங்கும் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மும்பை பல்கலைக்கழகத்தில் சாவா்க்கா் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையத்தின் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் பேசியதாவது: பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவா்க்கரின் வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க விரிவான திட்டத்தைத் தயாரிக்குமாறு மும்பை பல்கலைக்கழகத்திடம் நான் கேட்டுள்ளேன். இதுகுறித்து பிரிட்டனில் உள்ள தொடா்புடைய அதிகாரிகளுடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.

சாவா்க்கா் ஒரு தனிமனிதரல்ல; அவா் ஓா் இயக்கம். சாவா்க்கரின் வாழ்க்கை, அவரது துணிச்சல், அறிவுத்திறன் மற்றும் புரட்சிகர கருத்துகள் எப்போதும் என்னை ஊக்கப்படுத்தியுள்ளன என்றாா்.

தேசம் மறக்காது - பிரதமா் மரியாதை

சாவா்க்கரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தி பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்திய அன்னையின் உண்மையான மகன் வீர சாவா்க்கா். காலனித்துவ பிரிட்டிஷ் அரசின் கடுமையான அடுக்குமுறைகள் கூட தாய்நாட்டுக்கான அவரின் அா்ப்பணிப்பைக் குறைக்க முடியவில்லை.

சாவா்க்கரின் தியாகங்களும், அா்ப்பணிப்பும் வளா்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு கலங்கரை விளக்கமாகச் செயல்படும். அவரது அசாத்திய துணிச்சல் மற்றும் போராட்டத்தை நன்றியுள்ள தேசம் ஒருபோதும் மறக்க முடியாது’ என்று குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com