என்னுடன் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கத் தயாரா? - மோடிக்கு மமதா சவால்

மேற்குவங்க அரசை விமர்சித்த பிரதமர் மோடிக்கு முதல்வர் மமதா பானர்ஜி பதில் கருத்து.
CM Mamata Banerjee
ANI
Published on
Updated on
1 min read

தன்னுடன் தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பங்கேற்கத் தயாரா? என பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் அலிபர்துவார் பகுதியில் எரிவாயு திட்டத்தைத் தொடக்கிவைத்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், "மேற்குவங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற முர்ஷிதாபாத், மால்டா வன்முறைகள் மாநில அரசின் அராஜகம். இங்கு பெண்களுக்கு பாதுகாப்பின்மை, வேலைவாய்ப்பின்மை என பல பிரச்னைகள் உள்ளன. அதனால் 'ஆபரேஷன் பெங்கால்' மேற்கொள்வோம்" என்று மேற்குவங்க அரசை கடுமையாக சாடினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் மம்தா பானர்ஜி, 'இதுகுறித்து என்னுடன் தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பங்கேற்க வாருங்கள், நீங்கள் உங்கள் டெலிப்ராம்ப்டரைக் கொண்டு வரலாம்' என்று பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார். மேலும் தைரியம் இருந்தால் மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தலை நடத்துங்கள் என்றும் கூறியுள்ளார்.

"தேச நலனைப் பாதுகாக்க ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விளக்கமளித்து வரும் நிலையில், மத்திய அரசு 'அரசியல் ஹோலி' விளையாடிக் கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடி இன்று பேசியது அதிர்ச்சியை மட்டும் ஏற்படுத்தவில்லை. கேட்பதற்கே துரதிர்ஷ்டவசமாக இருக்கிறது. ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து 'ஆபரேஷன் பெங்கால்' மேற்கொள்வோம் என்று பிரதமர் மோடி எப்படி கூறலாம்?. அப்படி பேச வேண்டிய நேரம் இதுதானா? இப்படி பேசுபவர் பிரதமராக இருக்கத் தகுதியில்லை. பிரதமர் மோடி பொய்களையே கூறுகிறார். நாட்டை கொள்ளையடிக்கிறார்.

இவ்வாறு பேசியதன் மூலம் மேற்குவங்கத்தை பிரதமர் மோடி அவமதித்துள்ளார். மாநில மக்களை அவமதித்துள்ளார். அப்படியெனில் நாளைக்கே மேற்குவங்கத்தில் தேர்தலை நடத்துங்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்கள் சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து நான் கருத்து தெரிவிக்கமாட்டேன் ஆனால் ஒவ்வொரு பெண்ணும் மதிக்கப்பட வேண்டும், அதை மறந்துவிடாதீர்கள். அரசியல் லாபத்திற்காகவே மத்திய அரசு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரை தேர்வு செய்துள்ளது.

உலக நாடுகளுக்குச் சென்ற எம்.பி.க்கள் குழுவில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி ஒருவராக இருக்கும் நிலையில் பிரதமர் எதிர்க்கட்சியையும் மாநில அரசுகளையும் குறை கூறுவதில் மும்முரமாக இருக்கிறார்" என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com