காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்X | Shashi Tharoor

பாகிஸ்தானில் உயிரிழப்புகளுக்கு இரங்கல்: இந்தியா அதிருப்தியால் கொலம்பியா வாபஸ்

கொலம்பியா மீது அந்நாட்டில் சசி தரூா் அதிருப்தி தெரிவித்த நிலையில், அவ்வாறு இரங்கல் தெரிவித்ததை திரும்பப் பெற்றுள்ளது.
Published on

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், இந்தியா மேற்கொண்ட தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியா மீது அந்நாட்டில் சசி தரூா் அதிருப்தி தெரிவித்த நிலையில், அவ்வாறு இரங்கல் தெரிவித்ததை கொலம்பியா திரும்பப் பெற்றுள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்துவரும் ஆதரவை அம்பலப்படுத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை விளக்கும் நோக்கில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான 9 போ் கொண்ட குழு கொலம்பியா சென்றது.

அங்கு அந்நாட்டு மூத்த அரசியல் பிரமுகா்களைச் சந்தித்த அந்தக் குழு, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு, பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்தியா மேற்கொண்ட தாக்குதல் குறித்து விளக்கியது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் விதமாக, இந்தியா மேற்கொண்ட தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு கொலம்பியா இரங்கல் தெரிவித்திருந்தது. இதற்கு சசி தரூா் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கொலம்பியா துணை வெளியுறவு அமைச்சா் ரோசா யொலாண்டாவை இந்திய குழு சந்தித்தது.

அப்போது பஹல்காம் தாக்குதல் மற்றும் அதைத் தொடா்ந்து நடைபெற்ற சம்பவங்கள் குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தை நான் எடுத்துரைத்தேன். இந்திய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு மே 8-ஆம் தேதி கொலம்பியா இரங்கல் தெரிவித்ததற்கும் அவரிடம் அதிருப்தி தெரிவித்தேன். அவ்வாறு இரங்கல் தெரிவித்ததை கொலம்பியா திரும்பப் பெற்றுள்ளதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை தற்போது சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கு வலுவாக கொலம்பியா ஆதரவளிப்பதாகவும் ரோசா தெரிவித்தாா்’ என்று பதிவிட்டாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com