இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன! முப்படை தலைமைத் தளபதி ஒப்புதல்?

பாகிஸ்தான் மீதான போரில் இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை முப்படை தலைமைத் தளபதி ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன! முப்படை தலைமைத் தளபதி ஒப்புதல்?
Published on
Updated on
1 min read

பாகிஸ்தான் மீதான போரில் இந்திய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை ப்ளூம்பர்க் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில், முப்படை தலைமைத் தளபதி (மறைமுகமாக) ஒப்புக்கொண்டுள்ளார்.

ப்ளூம்பர்க் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில், இந்திய முப்படை தலைமை தளபதி அனில் சௌகான் அளித்த நேர்காணல் தற்போது வெளியாகியிருக்கிறது.

பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருந்தது. இருப்பினும், பாகிஸ்தானின் கருத்தை இந்திய ராணுவம் தொடர்ந்து மறுத்து வந்தது.

ஆனால், இன்றைய நேர்காணலில், இந்தியா - பாகிஸ்தான் சண்டையின்போது, பாகிஸ்தான், இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியிருக்கிறதே, அதனை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான், இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டியது என்னவென்றால், ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதையல்ல, ஏன் அவை சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதைத்தான். இதில் நல்லது என்னவென்றால், போரின்போது எடுக்கும் உக்திகளில் மேற்கொண்ட தவறுகள் என்ன என்பதை கண்டறிய உதவியது. அதனைக் கண்டறிந்து சரி செய்து, சரியான உக்திகளை பயன்படுத்தி, மீண்டும் மிகச் சரியான தாக்குதலை, அடுத்த இரண்டு நாள்களில் தொலைதூர இலக்குகளைக் குறிவைத்து வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம் என்று கூறினார்.

இந்த பதிலில், ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதை மறைமுகமாகவே ஒப்புக்கொண்டிருந்தாலும், வீழ்த்தப்படவில்லை என்று அவர் முற்றிலும் மறுக்கவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இந்தியாவின் 6 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்ததை அனில் சௌகான் மறுத்து விட்டார்.

எல்லைத் தாண்டிய மோதலின்போதும், துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய ஆயுதங்கள் வேலை செய்யவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த அமெரிக்கா உதவியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிவரும் கருத்தையும் ஜெனரல் அனில் சௌகான் மறுத்தார்.

இந்த நிலையில், முப்படை தளபதி அனில் சௌகானின் மறைமுகமான ஒப்புதலைக் குறிப்பிட்டு, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கார்கில் போரையடுத்து, 5 மாதங்களுக்கு பிறகு அளிக்கப்பட்ட அறிக்கையைக் குறிப்பிட்ட ஜெய்ராம் ரமேஷ், முப்படை தலைமை தளபதியைப் போல பிரதமர் மோடியின் அரசும் ஒப்புக் கொள்ளுமா? என்று கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com