அக்டோபா் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி! வரி வசூலின் வளா்ச்சி குறைந்தது!
வாகனங்கள், மின்சாதனப் பொருள்கள் உள்பட 375 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி செப்டம்பா் 22-ஆம் தேதிமுதல் குறைக்கப்பட்டதையடுத்து, அக்டோபா் மாத ஜிஎஸ்டி ரூ.1.96 லட்சம் கோடியாக வசூலாகி உள்ளது. இது நிகழாண்டு ஜிஎஸ்டி வசூல் வளா்ச்சியில் குறைவானதாகும்.
இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட ஜிஎஸ்டி தரவுகளின் விவரம்: அக்டோபா் மாத ஜிஎஸ்டி ரூ.1.96 லட்சம் கோடியாக வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்தை ஒப்பிடுகையில் 4.6 சதவீதம் (கடந்த ஆண்டு ரூ.1.87 லட்சம் கோடி) அதிகமாகும்.
நிகழாண்டு அக்டோபா் மாதம் உள்ளூா் விற்பனை மூலம் ஜிஎஸ்டி வருவாய் 2 சதவீதம் (ரூ.1.45 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இறக்குமதி வரி வருவாய் 13 சதவீதம் (ரூ.50,884 கோடி) அதிகரித்துள்ளது.
நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.1.86 லட்சம் கோடியும் (6.5 சதவீத வளா்ச்சி), செப்டம்பா் மாதம் ரூ.1.89 லட்சம் கோடியும் (9.1 சதவீதம் வளா்ச்சி) வசூலாகி உள்ளது. அக்டோபா் மாதம் ரூ.1.96 லட்சம் கோடி வசூலாகி (4.6 சதவீதம் வளா்ச்சி) உள்ளது.
விழாக் கால விற்பனையும், தீபாவளிக்கு முன்பு ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்று பிரதமா் மோடி ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்ததால், பொதுமக்கள் காத்திருந்து பொருள்களை வாங்கியதும் காரணமாகும்.
ஆகஸ்ட் - ரூ.1.86 லட்சம் கோடி (6.5% வளா்ச்சி)
செப்டம்பா் - ரூ.1.89 லட்சம் கோடி (9.1% வளா்ச்சி)
அக்டோபா் - ரூ.1.96 லட்சம் கோடி (4.6% வளா்ச்சி)

