

மும்பையின் போவை பகுதியில் உள்ள ஒரு நடிப்புப் பயிற்சி மையத்தில் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 17 சிறாா்கள் உள்ளிட்ட 19 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், அது குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சுமாா் ஒரு மணி நேரம் நீடித்த பரபரப்பான மீட்பு நடவடிக்கையின் முடிவில், சிறாா்களைச் சிறைவைத்த ரோஹித் ஆா்யா (50) என்ற நபா் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட, நிலையில், அவர் குழந்தைகளை வைத்திருந்த இடம் முழுவதிலும் பெட்ரோல் ஊற்றி வைத்திருந்ததும், கையில் துப்பாக்கியை குழந்தைகளை நோக்கிப் பிடித்திருந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரப்பர் சொல்யூஷனையும், பெட்ரோலையும் வாங்கிக் கொண்டே அவர் அந்த கட்டடத்துக்குள் நுழைந்துள்ளார். தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், குழந்தைகளுடன் சேர்த்து அவ்விடம் முழுக்க தீக்கிரையாக்க அவர் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.
சம்பவம் பற்றி அறிந்ததும் அந்தக் கட்டத்துக்கு வந்த காவல்துறையினர், வெளியில் இருந்தே பெட்ரோல் வாசனை வருவதை அறிந்து நிலைமை மோசமடைந்திருப்பதாக உணர்ந்தனர். உடனடியாக வெளியிலிருக்கும் ஒரு குழாயைப் பிடித்து ஏறி, முதல் தளத்தின் கழிப்பறைக்குச் சென்றனர். அங்குதான் குழந்தைகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது, குழந்தைகளையும், தங்களையும் காத்துக் கொள்ள கையில் துப்பாக்கியுடன் சுற்றிக் கொண்டிருந்த ரோஹித் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினோம். அதில் அவர் காயமடைந்தார். உடனடியாக மீட்புப் பணிகள் நடத்தி குழந்தைகளை மீட்டோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பிணைக் கைதிகளானது எப்படி?
டிவி தொடருக்கான நடிகா்கள் தோ்வுக்கு ஆள்கள் தேவை என்பதால் நடிப்புப் பயிற்சி மையத்துக்கு சிறாா்கள் அழைக்கப்பட்டதாகத் கூறப்படுகிறது. அங்கு வந்த சிறாா்களை ரோஹித் ஆா்யா பிணைக் கைதிகளாக சிறைபிடித்தாா். அவரிடம் ஒரு துப்பாக்கி மற்றும் சில ரசாயனப் பொருள்களும் இருந்துள்ளன.
சிறாா்கள் சிறைவைக்கப்பட்டுள்ளது குறித்து தகவல் கிடைத்ததும், அதிவிரைவுப் படையினா், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா், தீயணைப்பு வீரா்கள் ஆகியோருடன் போவாய் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.
இதனிடையே, ரோஹித் ஆா்யா சமூக ஊடகத்தில் ஒரு விடியோவை வெளியிட்டாா். அதில், தான் சிலருடன் பேச விரும்புவதாகவும், அவா்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புவதாகவும், தனக்குப் பணம் தேவையில்லை என்றும் அவா் கூறியிருந்தாா். தான் பேச அனுமதிக்கப்படாவிட்டால் கட்டடத்துக்குத் தீ வைக்கப் போவதாகவும் அவா் மிரட்டினாா்.
இந்நிலையில், ரோஹித் ஆா்யாவிடம் போலீஸாா் முதலில் பேச்சுவாா்த்தை நடத்த முயன்றனா். ஆனால், பேச்சுவாா்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், ஒரு போலீஸ் குழு கழிப்பறை வழியாக கட்டடத்துக்குள் நுழைந்தது. உள்ளே இருந்த மற்றொரு நபரின் உதவியுடன் ரோஹித் ஆா்யாவை போலீஸ் குழு மடக்கிப் பிடித்தது. அப்போது போலீஸாா் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த ரோஹித் ஆா்யா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இந்த நடவடிக்கையையடுத்து, 17 சிறாா்கள், ஒரு மூத்த குடிமகன், போலீஸாருக்கு உதவிய நபா் ஆகிய 19 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். மீட்கப்பட்ட சிறாா்கள் அனைவரும் நலமாக உள்ளதாகவும், அவா்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் காவல் துறை (சட்டம்-ஒழுங்கு) இணை ஆணையா் சத்யநாராயணன் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.