

பிகாரில் இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது ஏன் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை? என்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.
மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு கோடி பேருக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்' என தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதியை குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்.
பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு சனிக்கிழமை இரண்டு பொதுக் கூட்டங்களில் பிரியங்கா காந்தி கலந்துகொள்ளவிருந்தார். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால் ககாரியா பொதுக்கூட்டத்தை அவர் ரத்து செய்தார்.
பாட்னாவில் இருந்து பேகுசராய் நகருக்கு சாலைவழியாகச் சென்று பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது: ``பிகாரில் ஏராளமான இயற்கை வளம் நிறைந்திருந்தபோதிலும் மக்களாகிய நீங்கள் வறுமையில் உழல்கிறீர்கள்.
மத்திய அரசு - பிகார் அரசு என்ற இரட்டை என்ஜின் அரசின்கீழ் பிகார் நல்ல வளர்ச்சியை அடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்கிறார். அவரது பேச்சைக் கேட்டு ஏமாற வேண்டாம். இங்கு ஓர் என்ஜின் அரசுதான் உள்ளது. அதுவும் தில்லியில் இருந்து நடத்தப்படுகிறது. பிகார் மக்கள் தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை. இந்த மாநில மக்களுக்கும் மரியாதை அளிக்கப்படுவதில்லை; முதல்வர் நிதீஷ்குமாருக்கும் மரியாதை அளிக்கப்படுவதில்லை.
பிகார் இன்று சந்தித்துவரும் பிரச்னைகளுக்கு முன்னாள் பிரதமர்களான நேரு மற்றும் இந்திரா காந்தியை குறைசொல்வதிலேயே பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தங்கள் ஒட்டுமொத்த நேரத்தையும் செலவிட்டு வருகின்றனர். ஒரு கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி அவர்கள் உங்களை ஏமாற்றப் பார்க்கின்றனர். அவர்கள் இதுவரை வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்காக பணியாற்றாதது ஏன்?
நேருவும், இந்திராகாந்தியும் பிரதமர்களாக இருந்தபோதுதான் பிகாரில் தொழிற்சாலைகளும், ஐஐடி, ஐஐஎம் போன்ற அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன என்பதை பாஜகவும் அதன் தலைவர்களும் நினைவில் கொள்ள வேண்டும்.
பிகாரில் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கை காரணமாக வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மக்களின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்தது முதலே மோடி தனது நண்பர்களான பெரிய வர்த்தகர்களுக்கு பொதுச் சொத்துகளை வாரி வழங்கி வருகிறார். மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக அவர்கள் பிளவுபடுத்தும் அரசியலை நடத்தி போலி தேசியவாதத்தைப் பேசுகின்றனர். தற்போது அவர்கள் வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் சாசனத்தால் உறுதி அளிக்கப்பட்டுள்ள வாக்களிக்கும் உரிமை மதிப்பு மிகுந்ததாகும். அதை இழப்பது குடிமக்களாக உங்களது அனைத்து உரிமைகளையும் பறித்துவிடும். அந்த உரிமையைக் காக்கும் வகையில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
உங்கள் வாக்குகளை விற்க வேண் டாம் என்று எனது சகோதரிகளை கேட்டுக் கொள்கிறேன். ஆளுங்கட்சிகள் தரும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்; ஆனால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.
எனது சகோதரர் ராகுல் காந்தி, சமூக நீதிக்காக அயராது பாடுபட்டு வருகிறார். ஜாதிய வேறுபாடுகளால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் சமூக நீதி மிகவும் அவசியமானது.
பிகாரில் ஜாதி ரீதியிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதை பாஜக எதிர்க்கிறது. இங்கு ஆட்சி அதிகாரத்தை காங்கிரஸ் பகிர்ந்து கொண்டிருந்தபோதுதான் அத்தகைய கணக்கெடுப்பின் அறிக்கை வெளியிடப்பட்டது’’ என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.