

இந்திய ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி, மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவுக்கு விமானப் படை விமானத்தில் வந்திறங்கிய போது, அவருக்கு ஹிந்து முறைப்படி திலகமிட்டு வரவேற்ற விடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய ராணுவத்தின் 30வது தலைமை தளபதியாக இருக்கும் உபேந்திர துவிவேதி மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாப் பகுதியைச் சேர்ந்தவர்.
இவர் தன்னுடைய மனைவியுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, சொந்த ஊரான மத்திய பிரதேச மாநிலம் ரேவா வந்து தரையிறங்கிய போது, வேத மந்திரங்கள் ஓத, ஹிந்து முறைப்படி நெற்றியில் திலகமிட்டு, மலர் மாலை அணிவித்து, காவி துண்டு போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமானத்தில் இருந்து இறங்கியதும் அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு விடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ராணுவ சீருடையில் இருக்கும் ஒருவர், வெளிப்படையாக, மத அடையாளங்களை சூட்டிக் கொள்ளக் கூடாது என்பது விதிமுறை உள்ளதால், இவ்வாறு ராணுவத் தலைமை தளபதியை எவ்வாறு திலகமிட்டு வரவேற்பார்கள் என்றும், அதனை எவ்வாறு இவர் ஏற்றுக் கொண்டார் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
விதிப்படி, நாட்டு மக்களிடையே மதச்சார்பற்ற எண்ணத்தை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும் இந்திய ராணுவ சீருடையில், மதச் சின்னங்களை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ராணுவ சீருடையில் இருக்கும்போது, வெளிப்படையாக தெரிவது போல திலகமிடுதல், விபூதி பூசுவது அல்லது நெற்றியில் எவ்வித மத சின்னங்களையும் தரிப்பது என்பது தடை செய்யப்பட்டுள்ளது.
அதுபோல தெரியும்படி, எந்த மத அடையாள ஆபரணங்களையும் அணியக் கூடாது, மத அடையாள சின்னங்களும் உடலில் இருக்கக் கூடாது என்று கூறப்படுகிறது.
எனவே, இந்திய ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதிக்கு இவ்வாறு வரவேற்பு அளித்தது பேசுபொருளாகியிருக்கிறது. ஒரு தரப்பினர், இந்தியாவில் யார் ஒருவரையும் வரவேற்கும்போது மாலை அணிவித்து திலகமிடுவது வழக்கம். இதில் ஹிந்து முறையை குறிப்பிடுவதில் அர்த்தமில்லை என்று கருத்திட்டுள்ளனர். மற்றொரு தரப்பில், சட்டத்தின் கீழ்தான் அனைவரும் வரும்போது, விதிமுறைகள் அனைவருக்குமே பொருந்தும் என்றும் கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள்.
முன்னதாக, ஒரு சில மாதங்களுக்கு முன்பு, மத்திய பிரதேச மாநிலம் சித்ரகூட்டில், ஆன்மிகத் தலைவர் ராமபத்ராச்சாரியாரை, ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, ராணுவ சீருடையில் சென்று பார்த்து ஆசி பெற்றிருந்தது பேசுபொருளாகியிருந்தது.
ராணுவ தளபதியை தான் சந்தித்தபோது, ஆன்மிகத் தலைவர் ராமபத்ராசார்யா, தனக்கு குரு தட்சிணையாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு காணிக்கையாகத் தர வேண்டும் என்று விடுத்தக் கோரிக்கையை ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி ஏற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க... மென்பொருள் திறன் படிப்புகள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.