

தேவுதானி ஏகாதசியை முன்னிட்டு அயோத்தி கோயிலைச் சுற்றி பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
தேவுதானி ஏகாதசியை முன்னிட்டு பகவான் விஷ்ணு கோயிகளில் சிறப்பு பூஜைகளும், ஆரத்தி வழிபாடுகளும் நடைபெற்றது.
இந்த புனித நாளில் பகவான் விஷ்ணு துயில் எழுவதாகவும், அவ்வாறு எழுந்தருளும்போது மங்கள சக்திகள் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நாளை கடவுளின் பாதங்களைத் தரிசிக்கும் ஒரு அரிய சந்தர்ப்பமாகவும் மக்கள் கருதுகின்றனர்.
இந்த நாளில் கிரகங்களின் நிலை சாதகமாக இருப்பதால், இந்த சூழலில் சுப காரியங்களைச் செய்தால் பலன்கள் நிச்சயம் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் விஷ்ணு பக்தர்கள் "பஞ்சகோசி பரிக்ரமம்" எனப்படும் புனித யாத்திரையை மேற்கொள்கின்றனர்.
அயோத்தி கோயிலைச் சுற்றி சுமார் 15 கிலோ மீட்டர் நடைப்பயணம் செல்கின்றனர். மக்கள் நடைப்பயணம் செய்ய ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
இதை தேவுதானி ஏகாதசி, பிரபோதினி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மதத்தில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். குறிப்பாக உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் தேவுதானி ஏகாதசி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்து வேதங்களின்படி, பகவான் விஷ்ணு துளசி என்ற பெண்ணை மணந்ததாகவும், இந்த திருமண சடங்கை நினைவுகூரும் வகையில் பக்தர்களால் இது கொண்டாடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
இந்த நாளில், விஷ்ணுவை வெள்ளை அல்லது மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து பக்தர்கள் வணங்குகிறார்கள். இன்றைய நாளில் பகவானுக்கு உகந்த பழங்கள், பூக்களையும் வைத்தும், பலர் புனித நீராடி மந்திரங்களை உச்சரித்தும் வணங்குகின்றனர். சிலர் விரதம் இருந்தும் தேவுதானி ஏகாதசியைக் கடைப்பிடிக்கின்றனர்.
அதன்படி, இன்று காலை முதலே பக்தர்கள் பலர் நடைப்பயணத்தில் பங்கேற்று பகவான் விஷ்ணுவின் நாமங்களை உச்சரித்த வண்ணம் உற்சாகத்துடன் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.