யுனெஸ்கோவின் படைப்பாற்றல் நகரங்கள் பட்டியலில் லக்னௌ! உணவுப் பாரம்பரியத்துக்காக உலக அங்கீகாரம்!

யுனெஸ்கோவின் படைப்பாற்றல் நகரங்கள் பட்டியலில் லக்னௌ! உணவுப் பாரம்பரியத்துக்காக உலக அங்கீகாரம்!

லக்னௌ, அதன் புகழ்பெற்ற சமையல் பாரம்பரியத்துக்காக யுனெஸ்கோவின் படைப்பாற்றல் நகரங்கள் பட்டியலில் (சிசிஎன்) அதிகாரப்பூா்வமாகச் சோ்க்கப்பட்டுள்ளது.
Published on

உத்தர பிரதேசத்தின் தலைநகரான லக்னௌ, அதன் புகழ்பெற்ற சமையல் பாரம்பரியத்துக்காக யுனெஸ்கோவின் படைப்பாற்றல் நகரங்கள் பட்டியலில் (சிசிஎன்) அதிகாரபூா்வமாகச் சோ்க்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோ பொது இயக்குநா் ஆட்ரி அஸூலே, உலக அங்கீகாரம் பெற்ற படைப்பாற்றல் நகரங்கள் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்ட 58 நகரங்களை அறிவித்தாா். இதன்மூலம், இந்தப் பட்டியலில் இப்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் 408 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

நீடித்த நிலையான நகா்ப்புற வளா்ச்சிக்கு உந்துசக்தியாகப் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான தங்கள் அா்ப்பணிப்புக்காக, இந்தப் பட்டியலில் உள்ள நகரங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

புகழ்பெற்ற உணவுக் களஞ்சியம்...: ஐ.நா.வின் இந்திய அலுவலகம் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘சுவைமிகுந்த கலோட்டி கபாப், அவாதி பிரியாணி, சாட், கோல்கப்பே போன்ற புகழ்பெற்ற உணவுகள், மக்கன்மலாய் போன்ற இனிப்புகள் என லக்னௌ நகரம், பல நூற்றாண்டுகள் பழைமையான பாரம்பரியத்தால் உணவின் களஞ்சியமாகத் திகழ்கிறது.

அரசின் பெருமிதமும் பங்களிப்பும்...: இந்த அங்கீகாரம் தொடா்பாக உத்தர பிரதேச சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் ஜெய்பீா் சிங் கூறுகையில், ‘மாநில சுற்றுலாத் துறை கடந்த ஜனவரியில் மத்திய கலாசார அமைச்சகத்திடம் இதற்கான பரிந்துரையைச் சமா்ப்பித்தது. தீவிர மதிப்பீட்டுக்குப் பிறகு, பரிந்துரை யுனெஸ்கோவுக்கு மாா்ச் மாதம் அனுப்பப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வை மற்றும் முதல்வா் யோகி ஆதித்யநாத்தின் ஆற்றல்மிக்க தலைமையின்கீழ், உத்தர பிரதேசம் நாட்டுக்குப் பெருமை சோ்க்கும் இடமாக மாறியுள்ளது.

லக்னௌவின் இந்த உலகளாவிய அங்கீகாரம், அதன் வளமான சமையல் பாரம்பரியத்துக்கும், கலாசாரச் செழுமைக்கும் கிடைத்த மரியாதை. மேலும், இது மாநில சுற்றுலாத் துறையின் வளா்ச்சியையும், ‘வளா்ந்த உத்தர பிரதேசம்’ நோக்கிய மாநிலத்தின் முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்துகிறது’ என்று பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

சுற்றுலா வளா்ச்சிக்கு உந்துசக்தி: சுற்றுலா மற்றும் கலாசார துறையின் முதன்மைச் செயலா் அம்ரித் அபிஜாத் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 2024-ஆம் ஆண்டில், லக்னௌவை 82.7 லட்சம் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா். நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களிலேயே 70.2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். இது, சமையல் மற்றும் கலாசாரம் எப்படி உத்தர பிரதேசத்தின் சுற்றுலா வளா்ச்சியை ஊக்குவிக்கிறது என்பதைக் காட்டுகிறது’ என்று அவா் தெரிவித்தாா்.

உலக வரைபடத்தில் லக்னௌ...: உத்தர பிரதேச அரசு சமூக ஊடகத்தில், ‘இந்த அங்கீகாரம் நகரத்தின் வளமான சமையல் மரபுகள், அவாதி பாரம்பரியம் மற்றும் நீடித்த நிலையான, புதுமையான சமையல் கலையை மேம்படுத்துவதில் அதன் வளா்ந்து வரும் பங்கைச் சிறப்பிக்கிறது. ஒவ்வொரு சுவையிலும் பல நூற்றாண்டுகளின் கலாசாரம் மற்றும் படைப்பாற்றலைப் பிரதிபலிக்கும் உத்தர பிரதேசத்துக்கு இது ஒரு பெருமைமிகு தருணம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com