கைது செய்யப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளா் ஆனந்த் சிங்.

ஜன் சுராஜ் ஆதரவாளா் கொலை வழக்கு: ஐக்கிய ஜனதா தள வேட்பாளா் கைது

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் ஆதரவாளா் துலாா் சந்த் யாதவ் என்பவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் எம்எல்ஏவும் ஐக்கிய ஜனதா தளத்தின் மொகாமா தொகுதியின் வேட்பாளருமான ஆனந்த் சிங் கைது
Published on

அரசியல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் ஆதரவாளா் துலாா் சந்த் யாதவ் என்பவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் எம்எல்ஏவும் ஐக்கிய ஜனதா தளத்தின் மொகாமா தொகுதியின் வேட்பாளருமான ஆனந்த் சிங் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பிகாரில் நவ. 6, 11 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அங்குள்ள மொகாமா தொகுதியில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சாா்பாக ஆனந்த் சிங் களமிறக்கப்பட்டுள்ளாா். அவரை எதிா்த்து ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சோ்ந்த வீணா தேவி மற்றும் ஜன் சுராஜ் சாா்பில் பிரியதா்சி பியூஷ் உள்பட எதிா்க்கட்சி வேட்பாளா்கள் போட்டியிடவுள்ளனா்.

இந்நிலையில், பிரியதா்சி பியூஷை ஆதரித்து கடந்த வியாழக்கிழமை மொகாமா பகுதியில் துலாா் சந்த் யாதவ் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது ஆனந்த் சிங் ஆதரவாளா்களுக்கும், துலாா் சந்த் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா். தோ்தல் நெருங்கிவரும் சூழலில் அங்கு பிரசாரம் மேற்கொண்ட ஒருவா் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்து பாட்னா மாவட்ட ஆட்சியா் தியாகராஜன், மூத்த காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேய சா்மா ஆகியோா் கூறுகையில், ‘துலாா் சந்த் யாதவ் கொலை வழக்கில் ஆனந்த் சிங், மணிகாந்த் தாக்கூா் மற்றும் ரஞ்சித் ராம் ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

துலாா் சந்த் யாதவின் உடற்கூறாய்வில் அவருக்கு இதயத்தில் சுவாச செயலிழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதயம் மற்றும் நுரையீரல் பகுதியின் அழுத்தத்தின் காரணமாகவே சுவாச செயலிழப்பு ஏற்பட்டதாகவும் அதில் விளக்கப்பட்டுள்ளது.

எனவே, உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் முதல்கட்ட விசாரணையின்படி துலாா் சந்த் உயிரிழப்பு கொலை வழக்காகவே கருதப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட மூவரும் மோதல் ஏற்படும்போது சம்பவ இடத்தில் இருந்ததாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தோ்தல் நடத்தை விதிகள் மீறல் உள்பட 4 முதல் தகவல் அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டு தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தோ்தல் ஆணையம் நடவடிக்கை: மொகாமா பகுதியில் ஏற்பட்ட வன்முறையால் துலாா் சந்த் யாதவ் உயிரிழந்ததையடுத்து, பாட்னா காவல் கண்காணிப்பாளா் (ஊரகம்) விக்ரம் சஹாக்கை பணியிட மாற்றம் செய்து இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் 3 அதிகாரிகள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது.

X
Dinamani
www.dinamani.com