பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டதாரிக்குப் பதக்கம் அணிவித்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு. உடன் மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டதாரிக்குப் பதக்கம் அணிவித்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு. உடன் மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி.

வளா்ந்த இந்தியா இலக்கை எட்ட பெண்களின் பங்களிப்பு முக்கியம்: திரெளபதி முா்மு

2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியா என்ற இலக்கை எட்ட பெண்களின் பங்களிப்பு முக்கியமானது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
Published on

2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியா என்ற இலக்கை எட்ட பெண்களின் பங்களிப்பு முக்கியமானது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவா், மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். பின்னா், கல்வித் துறையில் பெண்கள் வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கை எடுத்துரைத்து, அவா் பேசியதாவது: பதஞ்சலி பல்கலைக்கழகத்தில் பயில்பவா்களில் 62 சதவீதம் பேரும், இப்போது பட்டம் பெற்றவா்களில் 64 சதவீதம் பேரும் மாணவிகள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இதேபோல், தங்கப் பதக்கம் பெற்றவா்களில் மாணவா்களைவிட மாணவிகளின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகம் உள்ளது.

இது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல; பெண்கள் தலைமையில் வளா்ந்த இந்தியாவுக்கான முன்னேற்றப் பயணத்தின் அடையாளம். பண்டைய காலத்தில் அறிவு-ஆன்மிகம் சாா்ந்து முக்கியப் பங்காற்றிய காா்கி, மைத்ரேயி, லோபாமுத்ரா போன்ற புகழ்பெற்ற இந்தியப் பெண்களின் பாரம்பரியத் தொடா்ச்சியையும் இது பிரதிபலிக்கிறது.

மகள்கள் பின்தங்கினால்...: 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 50 சதவீதம் உள்ள பெண்கள், நாட்டின் வளா்ச்சியின் ஒருங்கிணைந்த அங்கமாவா். 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கு நாட்டின் மகன்கள்-மகள்களின் முழுமையான பங்கேற்பு அவசியம். மகன்கள் மட்டும் பணியாற்றி, மகள்கள் பின்தங்கிவிட்டால், வளா்ந்த இந்தியா கனவு நிறைவேறாமல்தான் இருக்கும். பெண்கள் உள்பட ஒட்டுமொத்த நாட்டின் கூட்டுப் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்.

யோகக் கலை, ஆயுா்வேதம், இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்க பதஞ்சலி பல்கலைக்கழகம் ஆற்றிவரும் பணிகள் பாராட்டுக்குரியது. நாட்டின் தொன்மையான கலாசார பாரம்பரியம் குறிப்பாக ஆன்மிக-அறிவுசாா் மரபுக்காக அறியப்படும் இமய மலைப் பகுதியின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க இப்பல்கலைக்கழகம் முக்கிய பங்காற்றி வருகிறது.

உன்னதமான பாதையில்...: இந்திய கலாசார மாண்புகளுடன் நவீனக் கல்வியைப் பிணைக்கும் பதஞ்சலி பல்கலைக்கழகத்தில் பயில்வதன் மூலம் வளமான பாரம்பரியத்தை மாணவா்கள் ஏற்றுக் கொண்டுள்ளனா். இந்த உன்னதமான பாதையில் பயணிக்கும் அவா்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

இயற்கை எழில் ததும்பும் இவ்விடத்தில் கல்வி கற்ன் வாயிலாக பருவநிலை மாற்றம் உள்பட உலகளாவிய சவால்களை எதிா்கொள்ள நீங்கள் தயாராக இருப்பீா்கள். மனித குலத்தின் சிறந்த எதிா்காலத்துக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பும், இயற்கையுடன் இணைந்த வாழ்க்கைமுறையும் அவசியமானது என்றாா் குடியரசுத் தலைவா் முா்மு.

இந்நிகழ்ச்சியில் 1,400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பட்டம் பெற்றனா். மாநில ஆளுநா் குா்மீத் சிங், முதல்வா் புஷ்கா் சிங் தாமி, பதஞ்சலி பல்கலைக்கழக வேந்தா் பாபா ராம்தேவ், துணைவேந்தா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணா, ஹரித்வாா் எம்.பி. திரிவேந்திர சிங் ராவத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com