

சிலர் விரும்புகிறார்கள் என்பதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய்ய முடியாது என்று அந்த அமைப்பின் பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹொசபாலே தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூன்று நாள் அகில இந்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன் நிறைவு நாளான சனிக்கிழமை, அந்த அமைப்பின் பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹொசபாலே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடைசெய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்து தத்தாத்ரேய ஹொச பாலே கூறியதாவது: ``ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்வதற்கு கடந்த காலங்களில் மூன்று முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது சமூகம் சொன்னது என்ன? நீதிமன்றம் சொன்னது என்ன? இவை அனைத்தையும் தாண்டி அமைப்பின் பணி வளர்ந்து வந்தது. ஓர் அமைப்பைத் தடைசெய்ய வேண்டுமானால் அதற்குப் பொருத்தமான காரணங்கள் இருக்க வேண் டும். சிலர் விரும்புகிறார்கள் என்பதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடைசெய்ய முடியாது. இந் தியாவின் ஒற்றுமை, பாதுகாப்பு, கலாசாரம் ஆகியவற்றுக்காகப் பாடுபட்டு வரும் ஓர் அமைப்பை தடைசெய்ய வேண்டும்' என்று ஒரு தலைவர் கூறினால் அதற்கான காரணத்தை அவர் கூற வேண்டும்.
ஆர்எஸ்எஸ் அமைப்பை சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனைத் தடைசெய்வது தவறு என்று அரசு நடைமுறைகளும் கூறியுள்ளன. இப்போது தடை கோருபவர்கள் கடந்தகால அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆர்எஸ்எஸ் செயற்குழுக் கூட்டத்தில் பிகார் அல்லது மேற்கு வங்கத்தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்பட்டதா என்று கேட்கிறீர்கள். பிகார் தேர்தல் குறித்து விவாதிக்கப்படவில்லை. எனினும், பிகார் தேர்தலில் மக்கள் பெருவாரியாக வாக்களிக்க வேண்டும் என்பதே எங்கள் அமைப்பின் நிலைப்பாடாகும். மேலும் தேசம், சமூகம் தொடர்பான பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டுமே தவிர, ஜாதி அல்லது பணத்தின் அடிப்படையில் வாக்களிக்கக் கூடாது.
ஆர்எஸ்எஸ் செயற்குழுக் கூட்டத்தில் மேற்கு வங்க நிலைமை குறித்து விவாதிக்கப்படவில்லை. அதுதொடர்பாக ஏற்கெனவே விவாதம் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் நிலைமை மோசமாக உள்ளது. எங்களது முந்தைய கூட்டத்தில் மேற்கு வங்கம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பணி விரிவடைந்து வருகிறது. அங்கு கடந்த தேர்தலுக்குப் பிறகு அரசியல் தலைமை மற்றும் முதல்வரின் அணுகுமுறை காரணமாக வெறுப்பும், விரோதமும் பரப்பப்பட்டது.
மேற்கு வங்கம் என்பது எல்லை மாநிலமாகும். அண்டைநாடான வங்கதேசத்தில் இருந்து மக்கள் சட்டவிரோதமாக அங்கு வரும் பிரச்னையை அந்த மாநிலம் எதிர்கொண்டுள்ளது.
இந்த அச்சுறுத்தலுக்கு முடிவுகட்ட அரசியல் தலைமை தவறினால் மேற்கு வங்கத்தை நிலையற்ற தன்மை மற்றும் வன்முறை நிறைந்த சூழலில் இருந்து காப்பது கடினமாக இருக்கும். மேற்கு வங்கத்தில் சமூக ஒற்றுமையை வலுப்படுத்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை குறித்த கால இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும். பட்டியல் திருத்தப்படுவதில் என்ன பிரச்னை உள்ளது? இந்த நடவடிக்கையில் யாருக்காவது ஆட்சேபம் இருந்தால் அவர்கள் அதை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கலாம்’’ என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.