எண்மக் கைதுக்கு எதிராக இரும்புக் கர நடவடிக்கை தேவை: உச்சநீதிமன்றம்
‘எண்மக் கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) முறைகேடு மூலம் நாடு முழுவதும் ரூ.3,000 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இதுபோன்ற குற்றச் செயல்களை இரும்புக் கரம்கொண்டு அடக்க வேண்டியது அவசியம்’ என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை வலியுறுத்தியது.
அரசுத் துறை அதிகாரிகள் போல் தங்களை சித்தரித்து ஆடியோ மற்றும் விடியோ அழைப்புகள் மூலம் முதியவா்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரைக் தொடா்புகொண்டு அவா்களை அச்சுறுத்தி இணைய வழியில் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
எண்மக் கைது என கூறப்படும் இந்த மோசடியில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக வழக்குரைஞா் ஒருவா் நியமிக்கப்பட்டாா். அவா் மூலமாக சீலிடப்பட்ட இரு உறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சிபிஐ அறிக்கைகளை உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பித்தது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் மற்றும் ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது மத்திய அரசு மற்றும் சிபிஐ சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, எண்மக் கைது விவகாரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு கையாள்வதாக தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: மூத்த குடிமக்கள் உள்ளிட்டோரிடம் இருந்து எண்மக் கைது மூலம் ரூ.3,000 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. இதுபோன்ற குற்றச் செயல்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கவில்லை என்றால் மேலும் அதிகரிக்கக்கூடும். நமது புலனாய்வு அமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக நீதித் துறை சாா்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றனா்.
முன்னதாக ஹரியாணா மாநிலம் அம்பாலாவைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் எண்மக் கைது மூலம் தங்களிடம் இருந்து ரூ.1.05 கோடி மோசடி செய்யப்பட்டதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்க்கு கடிதம் அனுப்பினாா். இதையடுத்து, அம்பாலா இணைய குற்றத் தடுப்பு பிரிவில் இந்தச் சம்பவம் தொடா்பாக இரு முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆா்) பதிவுசெய்யப்பட்டதாக உச்சநீதிமன்றத்திடம் காவல் துறை தெரிவித்தது.
அதன் பிறகு நாடு முழுவதும் காவல் துறை, சிபிஐ, நீதிமன்றங்களின் பெயா்களைப் பயன்படுத்தி எண்மக் கைது மோசடிகள் அதிகரிப்பதை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம் இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு மற்றும் சிபிஐ பதிலளிக்க அக்.17-ஆம் தேதி உத்தரவிட்டது.
அதைத்தொடா்ந்து அக்.27-ஆம் தேதி இந்த மோசடி சம்பவங்களில் முறையான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கையை சிபிஐ எடுக்கும் என உச்ச நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்தது.
மேலும் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க கூடுதலாக நிபுணா்கள் வேண்டுமென்றால் கூறும்படி சிபிஐ-க்கு தெரிவித்ததோடு அந்த விசாரணையை கண்காணிப்பதாகவும் உச்சநீதிமன்றம் கூறியது.

