

கேரள மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைக் காலால் உதைத்துத் தள்ளிவிட்ட நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் ஆலுவா நகரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரளா விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டது. வர்க்கலா ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு ரயில் புறப்பட்டபோது ஒரு பெட்டியின் ஏறும் வழியில் பாலோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகுட்டி என்ற 20 வயதுப் பெண் நின்று கொண்டிருந்தார். வழியில் நிற்காமல் விலகிச் செல்லுமாறு அவரிடம் சுரேஷ்குமார் (50) என்ற பயணி வலியுறுத்தினார். எனினும், அதை ஏற்காமல் ஸ்ரீகுட்டி அதே இடத்தில் நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், ஓடும் ரயிலில் இருந்து ஸ்ரீகுட்டியைக் காலால் உதைத்து வெளியே தள்ளிவிட்டார். இதைக் கண்டு அருகில் இருந்த ஸ்ரீகுட்டியின் தோழி அர்ச்சனா கூச்சலிட்டு, காவலர்கள் உதவியை நாடினார்.
இதைத் தொடர்ந்து அர்ச்சனாவையும் ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளிவிட சுரேஷ்குமார் முயன்றார். எனினும், அர்ச்சனாவுக்கு உதவியாக மற்ற பயணிகள் விரைந்து வந்து, அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
இதையடுத்து காவலர்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது வர்க்கலா ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் தண்டவாளத்தில் ஸ்ரீகுட்டி விழுந்து கிடந்ததைக் கண்டனர். அவரை அவர்கள் மீட்டு வர்க்கலா ரயில் நிலையத்துக்கு கொண்டுசென்று அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் அங்கிருந்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீகுட்டியின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, ஸ்ரீகுட்டியின் தோழி அர்ச்சனா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சுரேஷ்குமாரை கைது செய்தனர். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் மது அருந்தியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
கொச்சுவேளி ரயில் நிலைய ரயில்வே பாதுகாப்புப் படையிடம் சுரேஷ்குமாரை காவல் துறையினர் ஒப்படைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.