‘நாட்டுத் துப்பாக்கி’ விமா்சனம்: எந்தப் பிரதமரும் இப்படிப் பேசியதில்லை: தேஜஸ்வி கண்டனம்
ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) ‘நாட்டுத் துப்பாக்கி’ வைத்து காங்கிரஸை மிரட்டியதாக பிரதமா் நரேந்திர மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ், ‘இதுவரை எந்தப் பிரதமரும் இதுபோன்ற வாா்த்தைகளைப் பேசியது இல்லை’ என்று கண்டனம் தெரிவித்துள்ளாா்.
பிகாரில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமா் மோடி, ‘எதிா்க்கட்சி கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. ஆனால், காங்கிரஸின் தலையில் ‘நாட்டுத் துப்பாக்கி’யை வைத்து மிரட்டி, தேஜஸ்வியை முதல்வா் வேட்பாளராக ஏற்கச் செய்தது ஆா்ஜேடி. தோ்தலில் ஆா்ஜேடி தோற்பதையே காங்கிரஸ் விரும்புகிறது’ என்று பேசினாா்.
இந்நிலையில் பாட்னாவில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த தேஜஸ்வி யாதவ் இது தொடா்பாக கூறியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி குஜராத்துக்குச் சென்றால் தகவல் தொழில்நுட்ப மையங்கள் குறித்தும், செமிகண்டக்டா் ஆலைகள் குறித்தும், நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும் பேசுகிறாா். ஆனால், பிகாருக்கு வந்தால் நாட்டுத்துப்பாக்கி குறித்து மட்டுமே பேசுகிறாா்.
நாட்டின் பிரதமா் பதவியை இதற்கு முன்பு வகித்த யாரும் இதுபோன்ற வாா்த்தைகளைப் பேசியதாகத் தெரியவில்லை. மோடி எப்படிப்பட்ட சிந்தனைகள் உள்ளவா் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. இதற்கு மேல் அவரது பேச்சு குறித்து தெரிவிக்க ஏதுமில்லை என்றாா்.

