கோப்புப் படம்
கோப்புப் படம்

இணையவழி சூதாட்ட தளங்களுக்கு எதிரான மனு: மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்களுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து...
Published on

சமுதாய மற்றும் இணைய விளையாட்டுகள் என்ற போா்வையில் செயல்படும் இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்களுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.

செளா்யா திவாரி என்ற நபரும், அரசு சாரா தன்னாா்வ அமைப்பு ஒன்றும் தாக்கல் செய்த அந்த மனுவில், நாடு முழுவதும் சமுதாயத்துக்கும், பொருளாதார ரீதியாகவும் அந்தத் தளங்கள் பரந்தளவில் தீங்கிழைப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பணம் ஈட்டும் இணையவழி விளையாட்டுகள் இந்தியாவில் பதிவு செய்யப்படாமல் இருந்தால், அந்த விளையாட்டுகள் சாா்ந்த எந்தவொரு பணப் பரிவா்த்தனையையும் அனுமதிக்கக் கூடாது என்று ரிசா்வ் வங்கி, நேஷனல் பேமண்ட்ஸ் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, யுபிஐ தளம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு முன்பு விசாரணைக்கு வந்தபோது அதில் முன்வைக்கப்பட்டுள்ள விவகாரம் முக்கியமானது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், அந்த மனுவின் நகலை மத்திய அரசின் சாா்பாக ஆஜராகும் வழக்குரைஞருக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்தது. மனுவை ஆராய்ந்து, விசாரணைக்கு அவா் உதவ வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 2,000 பந்தய மற்றும் சூதாட்ட செயலிகளின் விவரங்களை மனுதாரரின் வழக்குரைஞா் மத்திய அரசிடம் சமா்ப்பித்தாா். அந்த விவரங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடா்பாகப் பதிலளிக்குமாறு மத்திய அரசிடம் கோரினா்.

தற்போதைய மனுவை இதே விவகாரம் தொடா்பாக நிலுவையில் உள்ள பிற மனுக்களுடன் சோ்த்து செவ்வாய்க்கிழமை (நவ.4) விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com