

புது தில்லி: தெரு நாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் நவம்பர் 7 ஆம் தேதி கூடுதலாக வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு, பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருப்பதைக் குறிப்பெடுத்துக் கொண்டனர்.
மேலும், கேரள தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த விலக்குக் கோரும் மனுவை அனுமதித்த நிலையில், மாநில முதன்மைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதையும் அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டனர்.
உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏந்த் இந்த வழக்கில், இந்திய விலங்குகள் நல வாரியத்தையும், ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்.
வழக்கு விசாரணையின் ஆரம்பத்திலேயே, பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று தங்கள் தரப்புப் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருந்ததாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சிறப்பு நீதிபதிகள் அமர்விடம் தெரிவித்துக் கொண்டார்.
இதையடுத்து, பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து ஒருங்கிணைத்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அனைத்து தலைமைச் செயலர்களும் அடுத்த விசாரணையில் ஆஜராக வேண்டியதில்லை என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவை அலட்சியமாகக் கையாண்டதாலேயே, தலைமைச் செயலர்களை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சரியாக கையாளாவிட்டால், மீண்டும் இவர்கள் நேரில் ஆஜராகும் நிலை ஏற்படும் என்று சுட்டிக்காட்டியதோடு, நவம்பர் 7 ஆம் தேதி கூடுதலாக வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.