

இந்திய ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியல் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ’புராஜெக்ட் சிண்டிகேட்' என்ற சர்வதேச ஊடக நிறுவனத்துக்காக அவர் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:
பல ஆண்டுகளாக இந்திய அரசியலில் ஒரு குடும்பம் செல்வாக்கை செலுத்தி வருகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு, பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்.பி. பிரியங்கா காந்தி உள்பட நேரு-காந்தி குடும்பத்தின் செல்வாக்கு இந்திய அரசியலில் முக்கிய இடம்பிடித்துள்ளது.
அரசியல் தலைமை என்பது ஒரு பிறப்புரிமையாக இருக்க முடியும் என்ற சிந்தனையை இது வலுப்படுத்தியுள்ளது. இந்தச் சிந்தனையானது ஒவ்வொரு கட்சியிலும், ஒவ்வொரு பிராந்தியத்திலும், ஒவ்வொரு நிலையிலும் ஊடுருவியுள்ளது. கட்சி வேறுபாடுகளைக் கடந்த பல மட்டங்களிலும் வாரிசு அரசியல் காணப்படுகிறது. ஒடிஸாவைச் சேர்ந்த பிஜு பட்நாயக் மறைந்ததும் மக்களவையில் அவர் பெற்றிருந்த இடத்தில் அவரது மகன் நவீன் பட்நாயக் வெற்றி பெற்று எம்.பி.யானார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சி நிறுவனர் பால் தாக்கரே தனக்குப் பின் கட்சியை தன் மகன் உத்தவ் தாக்கரேயிடம் ஒப்படைத்தார். தற்போது உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே அக்கட்சியில் முக்கியத்துவம் பெற்று வருகிறார்.
அதேபோன்று உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் விஷயத்திலும் வாரிசு அரசியல் பின்பற்றப்பட்டது. அவருக்குப் பின் மகன் அகிலேஷ் முதல்வராகப் பதவி வகித்தார். தற்போது எம்.பி.யாக உள்ள அகிலேஷ், சமாஜவாதி கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். பிகாரில் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக ராம்விலாஸ் பாஸ்வான் இருந்தார். அவரது மறைவுக்குப் பின் அவரது மகன் சிராக் பாஸ்வான் அக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவராக நீண்ட காலமாக பிரகாஷ் சிங் பாதல் இருந்தார். அவருக்குப் பின் அவரது மகன் சுக்பீர் பாதல் அக்கட்சியின் தலைவராக இருக்கிறார். தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் நிறுவனர் கே.சந்திரசேகர் ராவின் அரசியல் வாரிசாக வருவது யார் என்பது தொடர்பாக அவரது மகனுக்கும் மகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மறைந்த மு.கருணாநிதியின் குடும்பம் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தை கட்டுப்படுத்தி வருகிறது. அவரது மகன் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார்; கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின் அடுத்த வாரிசாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.முக்கியமான அரசியல் குடும்பங்களில் மட்டுமின்றி கிராம சபைகள் முதல் நாடாளுமன்றம் வரை வாரிசு அரசியல் நீக்கமற நிறைந்துள்ளது. இந்திய துணைக் கண்டம் முழுவதும் வாரிசு அரசியல் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் இதே நிலை காணப்படுகிறது. பாகிஸ்தானில் புட்டோ மற்றும் ஷெரீஃப் குடும்பத்தினர், வங்கதேசத்தில் ஷேக் மற்றும் ஜியா குடும்பங்கள், இலங்கையில் பண்டாரநாயக மற்றும் ராஜபக்ச குடும்பங்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
வாரிசு அரசியல் நடைமுறையை இந்தியா முழுமையாக ஏற்றுக்கொண்டது ஏன்? அரசியலில் இருக்கும் ஒரு குடும்பம் மக்களிடையே ஒரு "பிராண்டாக' திகழ முடியும் என்பதே இதற்குக் காரணமாக இருக்க முடியும். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களின் கவனத்தைக் கவர மிகப்பெரிய அளவில் உழைக்க வேண்டிய அவசியம் இருக்காது. தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் தந்தை, அத்தை போன்றவர்களை வாக்காளர்கள் ஏற்றுக் கொள்ளும்போது இயல்பாகவே அந்த வேட்பாளருக்கு ஓர் ஏற்பு கிடைத்துவிடுகிறது.
இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் 81 சதவீதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கைப்பேசி மற்றும் இணையதள வசதியைப் பெற்றுள்ளோர் 95 சதவீதத்துக்கும் கூடுதலாக உள்ளனர்.
இந்திய அரசியல் கட்சிகள் பெரும்பாலும் ஒரு தனிப்பட்ட தலைவரின் ஆளுமை சார்ந்ததாக உள்ளன. தலைமையைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை ரகசியமானதாக உள்ளது. கட்சிகளில் முக்கிய முடிவுகளை சிலர் அடங்கிய குழுவோ, தனிப்பட்ட ஒரு தலைவரோ எடுக்கும் நிலை பொதுவாக காணப்படுகிறது. இதனால் தகுதியானவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுவதைவிட ஒரு தனிநபருக்கு வேண்டியவர்கள் முக்கியத்துவம் பெறும் நிலை உள்ளது.
இந்திய ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியல் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. தகுதியைவிட இன்னாரின் வாரிசு என்பது அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கும்போது ஆட்சி நிர்வாகத்தின் தரம் பாதிக்கப்படுகிறது. சாமானிய மக்கள் சந்தித்து வரும் சவால்களை அரசியல் வாரிசு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்வதில்லை.
வாரிசு அரசியல் அல்லாமல் தகுதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நேரம் இதுவாகும். உள்கட்சித் தேர்தல்களை அர்த்தமுள்ளதாக்கி கட்சித் தலைமை பதவிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கொண்டுவர வேண்டும். தலைவர்களை தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் வகையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதிகாரமளிக்க வேண்டும் என்று சசி தரூர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.