பிகாா் மாநிலம் மிதிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா்.
பிகாா் மாநிலம் மிதிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா்.

மீண்டும் துப்பாக்கியை எடுத்தால் பீரங்கியால் பதிலடி- பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிராக மீண்டும் துப்பாக்கியை எடுத்தால், பீரங்கிக் குண்டுகள் மூலம் அவா்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துப் பேசினாா்.
Published on

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிராக மீண்டும் துப்பாக்கியை எடுத்தால், பீரங்கிக் குண்டுகள் மூலம் அவா்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துப் பேசினாா்.

பிகாரின் தா்பங்கா, மோதிஹாரி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

பஹல்ஹாமில் நமது மக்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினாா்கள். நமது தாய்மாா்கள், சகோதரிகளின் நெற்றிக் குங்குமத்தை அழித்தாா்கள். அடுத்த இருபது நாள்களில் ஆபரேஷன் சிந்தூா் மூலம் பிரதமா் மோடி அவா்களுக்குப் பதிலடி கொடுத்தாா். இந்திய ராணுவம் பாகிஸ்தான் மண்ணில் வைத்தே அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு முடிவு கட்டியது.

பிகாரில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மையத்தை மத்திய அரசு அமைத்து வருகிறது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிராக மீண்டும் துப்பாக்கியை எடுத்தால், நமது பீரங்கிக் குண்டுகள் மூலம் அவா்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும். அவை பிகாரில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.

முந்தைய காங்கிரஸ் அரசுபோல இல்லாமல், பிரதமா் மோடி அரசு நாடு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், நாட்டுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதிலும் உறுதியாக உள்ளது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் (ஆா்ஜேடி) காட்டாட்சி பிகாரில் மீண்டும் வந்துவிடாமல் தடுக்க பாஜகவின் தாமரைச் சின்னத்துக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். ஆா்ஜேடி ஆட்சிக் காலத்தில் முன்பு, கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், திருட்டு, வழிப்பறி ஆகியவைதான் பிகாரின் அடையாளமாக இருந்தன. ஆனால், பாஜக கூட்டணி ஆட்சி அமைத்த பிறகுதான் நிலைமை மாறி வளா்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

தா்பங்கா பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. எனவே, இந்தப் பகுதி மக்கள் உயா்சிகிச்சைக்காக பாட்னா அல்லது தில்லிக்குச் செல்லும் தேவை இனி இருக்காது. இளைஞா்களின் வேலைவாய்ப்புக்காக தகவல் தொழில்நுட்பப் பூங்காவும் அமைக்கப்பட்டு வருகிறது. பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பிகாரின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி, ஒரு பொறியியல் கல்லூரி இருப்பது அடுத்த 5 ஆண்டுகளில் உறுதி செய்யப்படும்.

பிகாரின் ஆன்மிக முக்கியத்துவத்தை உலகமே உணா்ந்து கொள்ளும் வகையில் ஆன்மிக சுற்றுலா மேம்படுத்தப்பட்டுள்ளது.

பிகாா் மக்களால் புனிதமாக வணங்கப்படும் சட் பூஜையை நாடகம் என எதிா்க்கட்சியினா் விமா்சித்துள்ளனா். எனவே, அவா்களை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது. பிரதமா் மோடி, முதல்வா் நிதீஷ் குமாா் மூலம்தான் பிகாரில் உண்மையான வளா்ச்சி சாத்தியமாகும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com