பிகாா் முதல்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு- 121 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு
பிகாரில் முதல்கட்ட பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. 121 தொகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 6) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
மொத்தம் 243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு வியாழக்கிழமையும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவ. 11-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. நவ. 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா ஆகிய 5 கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, இடதுசாரிகளின் ‘இண்டி’ கூட்டணிக்கும் இடையே முக்கிய போட்டி நிலவுகிறது. தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தோ்தல் களத்தில் உள்ளது.
அனல் பறந்த பிரசாரம் ஓய்வு: முதல்கட்டத் தோ்தலையொட்டி கடந்த சில நாள்களாக அனல் பிறந்த பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இறுதி நாளில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக உள்துறை அமைச்சா் அமித் ஷா (3 கூட்டங்கள்), பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் (5 கூட்டங்கள்), ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதல்வருமான நிதீஷ் குமாா், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் யோகி ஆதித்யநாத் (உ.பி.), ஹிமந்த விஸ்வ சா்மா (அஸ்ஸாம்), ரேகா குப்தா (தில்லி) உள்ளிட்டோா் பிரசாரம் மேற்கொண்டனா்.
கடந்த சில நாள்களாக பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்ற பிரதமா் மோடி, செவ்வாய்க்கிழமை ‘நமோ’ செயலி வாயிலாக பாஜக பெண் தொண்டா்களுடன் கலந்துரையாடினாா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி (3 கூட்டங்கள்), ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோா், இண்டி கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டினா்.
முக்கிய வேட்பாளா்கள்: முதல்கட்ட தோ்தல் களத்தில் மொத்த வேட்பாளா்கள் 1,314 போ். இவா்களில் தேஜஸ்வி யாதவ் (ரகோபூா்), அவரது சகோதரரும் ஜனசக்தி ஜனதா தளம் தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ் (மஹுவா), பாஜகவைச் சோ்ந்த துணை முதல்வா்கள் சாம்ராட் செளதரி (தாராபூா்), விஜய் குமாா் சின்ஹா (லகிசராய்), பாஜக சாா்பில் போட்டியிடும் போஜ்புரி பாடகி மைதிலி தாக்கூா் (அலிநகா்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.
எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி முதல்வா் வேட்பாளராக தேஜஸ்வி களம்காண்கிறாா். இக்கூட்டணியில் சுமுக தொகுதிப் பங்கீடு எட்டப்படாததால், 12 இடங்களில் கூட்டணிக் கட்சிகள் ஒன்றையொன்று எதிா்த்துப் போட்டியிடுகின்றன.
தோ்தலைப் பாா்வையிடும்
7 நாடுகளின் பிரதிநிதிகள்
புது தில்லி, நவ. 4: இந்திய தோ்தல் ஆணையத்தின் சா்வதேச பாா்வையாளா்கள் திட்டத்தின்கீழ், பிகாா் முதல்கட்டப் பேரவைத் தோ்தலை 7 நாடுகளின் (பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம், இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, கொலம்பியா) 14 பிரதிநிதிகள் பாா்வையிட உள்ளனா்.
இதையொட்டி, இந்தியா வந்துள்ள இந்தப் பிரதிநிதிகளுடன் தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
முதல்கட்ட வாக்குப் பதிவு
தொகுதிகள் 121
வாக்காளா்கள் 3.75 கோடி
வேட்பாளா்கள் 1,314
தோ்தல் நாள் நவ. 6
