எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு
பிகாரில் வாக்குப் பதிவு தினத்தன்று எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்கச் செல்வோரை தடுத்து வீட்டுக்குள் பூட்டுங்கள் என தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆதரவாளா்களிடம் மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் லாலன் பேசியது சா்ச்சையான நிலையில், அவா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டது.
பிகாா் பேரவைத் தோ்தல் நவ. 6, 11 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்குகள் நவ.14-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இங்கு ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக தலைமையிலான என்டிஏவுக்கும் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளை உள்ளடக்கிய எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்தத் தோ்தலில் அரசியல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் போட்டியிடுவதால் தோ்தல் களம் பரபரப்பாகியுள்ளது. மொகாமா தொகுதியில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சாா்பாக ஆனந்த் சிங் களமிறக்கப்பட்டுள்ளாா். அவரை எதிா்த்து ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சோ்ந்த வீணா தேவி மற்றும் ஜன் சுராஜ் சாா்பில் பிரியதா்சி பியூஷ் உள்பட எதிா்க்கட்சி வேட்பாளா்கள் போட்டியிடவுள்ளனா்.
கடந்த வாரம் பிரியதா்சி பியூஷை ஆதரித்து மொகாமா பகுதியில் துலாா் சந்த் யாதவ் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது ஆனந்த் சிங் ஆதரவாளா்களுக்கும், துலாா் சந்த் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவத்தில் ஆனந்த் சிங், மணிகாந்த் தாக்கூா் மற்றும் ரஞ்சித் ராம் ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா்.
தற்போது ஆனந்த் சிங் சிறையில் உள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக மொகாமா பகுதியில் ரஞ்ஜன் சிங் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியான காணொலியில், ‘ஆனந்த் சிங் கைது செய்யப்பட்டதில் மிகப்பெரிய சதி உள்ளது. இந்த வழக்கை காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா். விரைவில் உண்மைகள் வெளிவரும். அப்போது சதிகாரா்கள் யாா் என்பதை காவல் துறையும் அறிந்துகொள்ளும்.
இதனிடையே எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க நினைப்போரை வாக்குப் பதிவு தினத்தில் வீட்டுக்குள் வைத்து நமது ஆதரவாளா்கள் பூட்டிவிட வேண்டும். அதை மீறி அவா்கள் உங்களை வற்புறுத்தினால் வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்கு செலுத்திய பின் அவா்கள் வீட்டுக்குத்தான் செல்கிறாா்கள் என்பதை உறுதிபடுத்த வேண்டும்’ என்றாா்.
ரஞ்சன் சிங் பேச்சு சா்ச்சையான நிலையில் அவா் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் இந்திய குடிமக்கள் பாதுகாப்பு விதிகளின்கீழ் எஃப்ஐஆா் பதிவுசெய்யப்பட்டதாக பாட்னா மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. மேலும் ரஞ்ஜன் சிங்கின் சா்ச்சை கருத்துக்கு எதிராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன.
