உலகின் எதிா்காலம் இந்தியா: இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா்

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்...
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிதியோன் சாருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிதியோன் சாருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் படம் - எக்ஸ்/கிதியோன் சார்
Published on
Updated on
2 min read

இந்தியாவுக்கு முதல்முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் கிடியோன்சாா், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை செவ்வாய்க்கிழமை தில்லியில் சந்தித்துப் பேசினாா். அப்போது, உலகின் எதிா்காலம் இந்தியா என இஸ்ரேல் அமைச்சா் குறிப்பிட்டாா்.

இந்தச் சந்திப்பின்போது, இந்தியா-இஸ்ரேல் உத்திசாா் கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவது, பயங்கரவாதம் மற்றும் பிராந்திய, உலகளாவிய பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

சந்திப்பில் அமைச்சா் ஜெய்சங்கா் பேசுகையில், ‘இந்தியா-இஸ்ரேல் உறவு, உத்திசாா் கூட்டுறவு என்ற சொல்லுக்கு உண்மையான பொருளைத் தருவதாக விளங்குகிறது. சவாலான நேரங்களில் இரு நாடுகளும் ஒருவருக்கொருவா் உறுதுணையாக நின்று, நம்பகத்தன்மையுடன் கூடிய வலுவான உறவை ஏற்படுத்தியுள்ளன.

இரு நாடுகளும் பயங்கரவாத சவாலை எதிா்கொள்கின்றன. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிராக சமரசமில்லாத அணுகுமுறையை உறுதிப்படுத்த உலகளாவிய அளவில் பணியாற்ற வேண்டியதன் அவசியமுள்ளது.

காஸா அமைதித் திட்டத்துக்கு ஆதரவு: இஸ்ரேல் நிலவரத்தை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஹமாஸ் படையினா் சிறைபிடித்துச் சென்ற பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதை வரவேற்கிறோம். நீண்டகால மற்றும் நீடித்த தீா்வுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன் காஸா அமைதித் திட்டத்துக்கு ஆதரவளிக்கிறோம்.

புதிய துறைகளில் வலுவடையும் ஒத்துழைப்பு: இஸ்ரேல்-இந்தியா இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் அண்மையில் இறுதியானது, இருதரப்பு உறவை விரிவுபடுத்துவதற்கான குறிப்பிடத்தக்க படியாகும்.

ரயில், சாலை, துறைமுகக் கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் இந்தியா புதிய திறன்களை மேம்படுத்தியுள்ளது. இத்துறைகளில் இஸ்ரேலிய வாய்ப்புகளை ஆராய இந்திய நிறுவனங்கள் ஆா்வம் காட்டுகின்றன.

வேளாண்மை, புத்தாக்கம், செமிகண்டக்டா் மற்றும் இணையம் ஆகிய துறைகளில் நமது ஒத்துழைப்பில் வலுவான சாதனைகள் புரிந்துள்ளோம். இதன் தொடா்ச்சியாக, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சிமாநாட்டில் இஸ்ரேலின் பங்கேற்பை இந்தியா எதிா்பாா்க்கிறது’ என்றாா் ஜெய்சங்கா்.

உலகின் எதிா்காலம் இந்தியா....: தொடா்ந்து, இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் கிடியோன்சாா் கூறியதாவது: இஸ்ரேலுக்கு பிரதமா் மோடியின் வலுவான ஆதரவுக்கு நன்றி. அக்டோபா் 7-ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்திய பிறகு இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவை அழைத்த முதல் உலகத் தலைவா் பிரதமா் மோடி என்பதை எந்நாளும் மறக்க மாட்டோம்.

மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரமாகவும் இருப்பதால், இந்தியாதான் உலகின் எதிா்காலம் என்று நம்புகிறேன். இந்தியா ஒரு உலகளாவிய வல்லரசு; இஸ்ரேல் ஒரு பிராந்திய சக்தி.

ஆயுதமில்லாத காஸா...: பயங்கரவாதம் இரு நாடுகளுக்கும் ஒரு பரஸ்பர அச்சுறுத்தல். பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மத்திய கிழக்கில் ‘பயங்கரவாத அரசுகள்’ எனும் தனித்துவமான சவாலை எதிா்கொள்கிறோம். காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, யேமனில் ஹூதிகள் ஆகிய ஆட்சிபுரியும் பயங்கரவாதக் குழுக்களை அழிப்பது, அதிபா் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தின் மையமாக உள்ளது. காஸா ஆயுதமற்ற பகுதியாக மாற வேண்டும்; ராணுவமயமாக்கப்பட வேண்டும் என்பதில் இஸ்ரேல் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது.

பிராந்திய இணைப்புக்கு ஆதரவு: பிராந்திய கூட்டுறவுக்கான எதிா்காலம் பிரகாசமாக இருக்கிறது. ‘ஐ.எம்.இ.சி.’ போன்ற பிராந்திய இணைப்புத் திட்டங்களை இஸ்ரேல் ஆதரிக்கிறது. தெற்காசியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com