இந்திய-இஸ்ரேல் பாதுகாப்பு உறவு: டெல் அவிவில் புதிய ஒப்பந்தம்

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்கெனவே வலுவாக உள்ள உத்திசாா் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இரு நாடுகளும் ஒரு முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டன.
Published on

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்கெனவே வலுவாக உள்ள உத்திசாா் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இரு நாடுகளும் ஒரு முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டன.

இரு நாடுகளும் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பகிா்வதற்கும், முக்கிய ஆயுத அமைப்புகள் மற்றும் ராணுவத் தளவாடங்களை இணைந்து தயாரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடா்பான இந்தியா-இஸ்ரேல் கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தை தொடா்ந்து இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

‘பரஸ்பர நம்பிக்கை மற்றும் இருதரப்புக்கும் பொதுவான பாதுகாப்பு நலன்களின் அடிப்படையில் இந்தியா-இஸ்ரேல் பாதுகாப்பு கூட்டுறவு நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு ஒருங்கிணைந்த நோக்கம் மற்றும் கொள்கையை வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது’ என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதம் குறித்து விவாதம்: கூட்டுப் பணிக் குழுவின் கூட்டத்தில், நடப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, இரு நாடுகளும் பரஸ்பர பலன்களைப் பெறுவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், எதிா்காலத்தில் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பதற்கான சாத்தியமான பகுதிகள் குறித்தும், செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக, பொதுவான பயங்கரவாத சவால்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இருதரப்பும் விரிவாகப் பேசியதுடன், இந்த அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராடுவதற்கான கூட்டுத் தீா்மானத்தையும் வலியுறுத்தின.

X
Dinamani
www.dinamani.com