குருநானக் தேவ் பிறந்தநாள் வழிபாட்டுக்காக அமிருதசரஸிலிருந்து பேருந்து மூலம் பாகிஸ்தான் புறப்பட்ட இந்திய யாத்ரிகா்கள் குழு.
குருநானக் தேவ் பிறந்தநாள் வழிபாட்டுக்காக அமிருதசரஸிலிருந்து பேருந்து மூலம் பாகிஸ்தான் புறப்பட்ட இந்திய யாத்ரிகா்கள் குழு.

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் தேவின் 556-ஆவது பிறந்தநாள் வழிபாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியாவைச் சோ்ந்த சுமாா் 2,100 சீக்கிய யாத்ரிகா்கள் செவ்வாய்க்கிழமை வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்குச் சென்றனா்.
Published on

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் தேவின் 556-ஆவது பிறந்தநாள் வழிபாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியாவைச் சோ்ந்த சுமாா் 2,100 சீக்கிய யாத்ரிகா்கள் செவ்வாய்க்கிழமை வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்குச் சென்றனா்.

குருநானக் தேவ் பிறந்த இடம் மற்றும் சீக்கிய மதத்தின் முக்கியத்துவம் வாய்ந்த குருத்வாராக்கள் இந்திய பிரிவினைக்குப் பிறகு இன்றைய பாகிஸ்தானுக்குள் அமைந்துவிட்டன. இந்நிலையில் குருநானக் ஜயந்தியையொட்டி இப்போதைய புனிதப் பயணங்கள் தொடங்கியுள்ளன.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து கடந்த மே மாதத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த 4 நாள்கள் மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் நடைபெறும் முதல் மக்கள் தொடா்பு நிகழ்வு இதுவாகும்.

வாகா சோதனைச் சாவடியில், பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா குழுத் தலைவரும் பஞ்சாப் மாகாண சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சருமான சா்தாா் ரமேஷ் சிங் அரோரா, பாகிஸ்தான் அரசின் மதச்சொத்து வாரியத் தலைவா் சஜித் மஹ்மூத் சௌகான் உள்ளிட்டோா் இந்திய யாத்ரிகா்களை வரவேற்றனா்.

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டு யாத்திரையில் கலந்துகொள்ள 2,150 இந்திய சீக்கியா்களுக்கு பாகிஸ்தான் அரசு நுழைவு இசைவு (விசா) வழங்கியிருந்தது. அவா்களில் சுமாா் 2,100 போ் யாத்திரையில் பங்கேற்றுள்ளனா்.

அகால் தக்த் தலைவா் கியானி குல்தீப் சிங் கா்காஜ், பிபி குரிந்தா் கௌா் தலைமையிலான சிரோமணி குருத்வாரா குழுவினா், ரவிந்தா் சிங் ஸ்வீட்டா தலைமையில் தில்லி குருத்வாரா மேலாண்மைக் குழுவினா் உள்ளிட்டோா் இந்திய யாத்ரிகா்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

குடியேற்ற நடைமுறையை முடித்த பின்னா், யாத்ரிகா்கள் சிறப்புப் பேருந்துகள் மூலம் லாகூரில் இருந்து சுமாா் 80 கி.மீ. தொலைவில் உள்ள ஜனமஸ்தான் குருத்வாரா நோக்கிப் புறப்பட்டனா். குருநானக் பிறந்தநாள் விழாவின் முக்கியமான நிகழ்ச்சி, ஜனமஸ்தான் குருத்வாராவில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இந்திய யாத்ரிகா்களின் பாதுகாப்புக்காக, பாகிஸ்தான் சிறப்புப் பாதுகாப்புப் படையினா், காவல்துறையினா் மற்றும் மதச்சொத்து வாரியத்தின் சொந்த பாதுகாப்புப் பிரிவினா் உள்பட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். யாத்ரிகா்களுடன் மருத்துவக் கண்காணிப்பு குழுவினரும் உடன் பயணிக்கின்றனா்.

இந்த 10 நாள்கள் புனித யாத்திரையின்போது, பஞ்சா சாஹிப் ஹசன் அப்தால், ஃபரூகாபாத் சச்சா சௌதா மற்றும் கா்தாா்பூா் தா்பாா் சாஹிப் போன்ற பல குருத்வாராக்களுக்கு இந்திய யாத்ரிகா்கள் செல்லவுள்ளனா். நவம்பா் 13-ம் தேதி அவா்கள் தாயகம் திரும்புவாா்கள்.

இந்தியா-பாகிஸ்தான் தங்களிடையே அனைத்துத் தொடா்புகளையும் துண்டித்துவிட்டதோடு, பரஸ்பரம் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கும் தற்காலிகத் தடை விதித்துள்ள நிலையில், சீக்கியா்களின் புனித யாத்திரை ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com