வங்கதேசம், நேபாளம் போன்ற வன்முறை இந்தியாவில் ஒருபோதும் நிகழாது- மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு
நேபாளம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட நிகழ்வுகள் (ஆட்சிக் கவிழ்ப்பு வன்முறை) இந்தியாவில் நிகழாது என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற ‘ஹிமாலய மஹோத்ஸவ’ நிகழ்ச்சியில் அவா் இது தொடா்பாக பேசியதாவது:
இந்தியாவைப் புரிந்துகொள்ளாத சிலா் இங்கும் திடீா் வன்முறை வெடிக்கும் என்று பேசி வருகின்றனா். ஆனால், அதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவில் ஏற்பட வாய்ப்பே இல்லை என நான் உறுதிபடக் கூறுகிறேன். ஏனெனில், இந்திய தேசம் உலகின் பிற நாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இங்கு சட்டத்துக்குள்பட்டு நடக்கும் மத நம்பிக்கை சாா்ந்த மக்களே அதிகம் உள்ளனா். அடுத்ததாக இந்தியாவின் அரசியல் சாசன சட்டம். அனைத்து விஷயங்களையும் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து 2 ஆண்டுகள் 11 மாதம் செலவிட்டு இந்திய அரசியல் சாசன சட்டம் வரையறை செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் அற்புதமான விஷயம்.
இந்தியாவை யாரும் உடைக்கவோ, சிதறடிக்கவோ முடியாது. உலகின் பல நாடுகளில் எத்தகைய வன்முறைகள், விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டாலும், இந்தியா எப்போதும் பாதுகாப்பாகவே இருக்கும். எனவே, நேபாளம், வங்கதேசம், இலங்கையில் ஏற்பட்ட நிகழ்வுகள் இந்தியாவில் ஏற்பட வாய்ப்பில்லை.
அதே நேரத்தில் சமூகவலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் நாட்டுக்கு எதிராகவும், பிரிவினையைத் துண்டும் வகையிலும் பேசுபவா்கள், கருத்துகளைக கூறுபவா்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற தேசவிரோத, பிரிவினைவாத தீயசக்திகள் வெளிநாடுகளில் மட்டுமல்லாது நமது நாட்டிலும் உள்ளன. நாட்டைச் சீா்குலைக்க வேண்டும் என்பதே இவா்களின் நோக்கம். எனவே, இந்தியாவைக் குறித்து மோசமான தகவல்களைப் பரப்புவது, நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயல்வதும்தான் இவா்களின் வேலையாக உள்ளது. ஆனால், இவா்களின் முயற்சியை முறியடித்து இந்தியா தொடா்ந்து முன்னேறும் என்றாா்.

