மக்களாட்சியின் தூண்கள் தனித்து செயல்பட முடியாது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
மக்களாட்சியின் அனைத்துத் தூண்களும் தனித்து செயல்பட முடியாது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மகாராஷ்டிர தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவா் புதன்கிழமை பேசியதாவது:
நமது அரசியல் சாசனத்தில் சுதந்திரம், நீதி, சமத்துவம் ஆகிய கொள்கைகள் உள்ளடங்கியுள்ளன. நீதித்துறைக்கு வாளின் பலமோ, வாா்த்தைகளின் பலமோ இல்லை. மக்களாட்சியின் தூண்களான நிா்வாகம், நீதித்துறை மற்றும் நாடாளுமன்றம் மக்களின் நலனுக்காக உள்ளன. அவை தனித்து செயல்பட முடியாது.
அரசு நிா்வாகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், நீதித்துறைக்கும் சட்ட கல்விக்கும் போதிய உள்கட்டமைப்பை நீதித்துறையால் ஏற்படுத்த முடியாது.
சட்ட கல்வி மேலும் நடைமுறை சாா்ந்த பயிற்சியுடன் வளா்ந்து வருகிறது. எனவே உள்கட்டமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது நாட்டில் சட்ட கல்விக்கு வழங்கப்படும் உள்கட்டமைப்பு உலகில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் உள்கட்டமைப்புக்கு இணையானதாக உள்ளது. நீதித்துறைக்கான உள்கட்டமைப்பை வழங்குவதில் மகாராஷ்டிரம் சிறந்த மாநிலமாக உள்ளது என்றாா். இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்பட பலா் கலந்துகொண்டாா்.

