

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலில் இளம் வயது வேட்பாளராக களமிறங்கியுள்ள மைதிலி தாக்குர், மக்கள் தன்னிடம் வைத்த கோரிக்கைகள் குறித்து இன்று (நவ. 5) பேசினார்.
போதிய அரசியல் அனுபவம் தன்னிடம் இல்லை என்றாலும், மக்கள் தன்னை சந்திக்கவரும்போது அவர்கள் கூறியதை நிறைவேற்றினாலே போதுமானது எனக் குறிப்பிட்டார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (நவ. 6) நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதற்கான பணிகள் தேர்தல் ஆணையம் சார்பில் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், அலிநகர் தொகுதியில் பாஜக சார்பில், நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்குர் போட்டியிடுகிறார். இவர் பிகார் வேட்பாளர்களில் இளம் வயதுடையவராவார் (25 வயது).
வாக்குப்பதிவையொட்டி பேசிய மைதிலி தாக்குர், ''எனது தொகுதிக்காக நான் கடினமாக உழைப்பேன். தேர்தல் முடிவுகள் மக்கள் முகத்தில் தெரிகிறது. வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு மக்களின் ஆசிர்வாதங்களை நான் பெற்றுள்ளதாக நினைக்கிறேன். நான் சேவை செய்ய வேண்டும் என நினைத்தால், அவர்கள் கரங்களால் நான் வரவேற்கப்படுவேன். கடந்த 20 ஆண்டுகளில் என்டிஏ கூட்டணியின் திட்டங்களால் தனது குடும்பம் எத்தகைய மாற்றங்களைக் கண்டது என்பதை ஒரு பெண் என்னிடம் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
எனக்கு அரசியல் அனுபவம் குறைவு. ஆனால், நாளும் புதிய விஷயங்களைக் கற்று வருகிறேன். மக்களை நேரில் சென்று சந்திக்கும்போது அரசின் திட்டங்களை நான் பட்டியலிட வேண்டியதில்லை. நிதீஷ் குமாரும் நரேந்திர மோடியும் செய்த செயல்களை அவர்களே என்னிடம் கூறுகின்றனர். மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் தெரிந்துள்ளன.
ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களுக்கும் அரசு வேலை வழங்குவது என்பது சாத்தியமற்றது. சாத்தியமானவற்றை சிந்திக்க வேண்டும். சாத்தியமானவற்றை மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். மக்களுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு பின்னர் ஏமாற்றுவது முறையல்ல. நான் பாஜகவின் அங்கம். மக்கள் என்னிடம் கொண்டுவந்த முறையீடுகளை நிறைவேற்றினாலே போதுமானது.
தொகுதியில் முறையான சாலை வசதி இல்லை, கல்லூரி வேண்டும், கேந்திரிய வித்யாலயா கொண்டுவர வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஆலைகளைக் கொண்டுவர வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.