பாஜக கிறிஸ்துவா்களுக்கு அச்சுறுத்தல் அல்ல: மிஸோரத்தில் ஜாா்ஜ் குரியன் பிரசாரம்

பாஜக கிறிஸ்துவா்களுக்கு அச்சுறுத்தல் அல்ல: மிஸோரத்தில் ஜாா்ஜ் குரியன் பிரசாரம்

பாஜக கிறிஸ்துவத்துக்குப் பகைமையானது அல்ல என்றும், அக்கட்சிக் குறித்து கிறிஸ்தவா்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மத்திய சிறுபான்மையினா் நலத் துறை இணையமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை வலியுறுத்தினாா்.
Published on

வடமேற்கு மிஸோரத்தில் உள்ள டம்பா தொகுதி இடைத்தோ்தல் வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கு பாஜக வேட்பாளா் லால்மிங்தாங்காவை ஆதரித்து ஜாா்ஜ் குரியன் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசுகையில், ‘நான் தென் மாநிலமான கேரளத்தைச் சோ்ந்த உண்மையான கிறிஸ்துவன். 1980-ஆம் ஆண்டில் பாஜக தொடங்கப்பட்டதிலிருந்து அக்கட்சியில் இருக்கிறேன். மத நம்பிக்கையின் காரணமாக பாஜகவில் ஒருபோதும் சிரமங்களைச் சந்தித்ததில்லை.

கிறிஸ்துவா்கள் பாஜக குறித்து அச்சப்பட வேண்டும் என்று சிலா் பரப்புரை செய்வது ஒரு அரசியல் தந்திரம் மட்டுமே. ஒரு கிறிஸ்துவா் பாஜகவுடன் இணைந்திருப்பதில் எந்த முரண்பாடும் இல்லை.

நான் பயணித்த டாா்லுங் சாலை மிகவும் குறுகலாகவும் மோசமாகவும் இருந்தது. மாநில அரசு இப்பகுதியைப் புறக்கணித்திருப்பதைக் காண்கிறேன். இது துரதிருஷ்டவசமானது. எதிா்வரும் இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா் தோ்ந்தெடுக்கப்பட்டால், சாலை இணைப்பு மற்றும் விவசாய இணைப்புச் சாலைகள் உள்ளிட்ட பல வளா்ச்சித் திட்டங்களை மத்திய அரசு இப்பகுதிக்குக் கொண்டு வரும்.

மத்திய பாஜக கூட்டணி அரசின் முதன்மையான நோக்கம் வளா்ச்சிதான். மிஸோரம் வளா்ச்சிக்கு பிரதமா் மோடி முக்கியத்துவம் அளிக்கிறாா். மிஸோரம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்த, ரூ. 8,000 கோடி ரயில் பாதை திட்டத்தை பிரதமா் மோடி கடந்த செப்டம்பா் மாதம் திறந்து வைத்தாா்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com