பணமுறைகேடு வழக்குகள்: எஃப்ஏடிஎஃப் அறிக்கையில் எடுத்துக்காட்டாக அமலாக்கத் துறை நடவடிக்கைகள்
பண முறைகேடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில், உலக அளவில் பின்பற்றப்பட்ட சிறந்த நடைமுறைகள் குறித்த பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) அறிக்கையில், அமலாக்கத் துறையின் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துக்காட்டாக குறிப்பிடப்பட்டுள்ளன.
பிரான்ஸ் தலைநகா் பாரீஸை மையமாக கொண்டு எஃப்ஏடிஎஃப் செயல்படுகிறது. 40 போ் கொண்ட இந்த அமைப்பு ‘சொத்துகள் பறிமுதலுக்கான சிறந்த நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்’ என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பண முறைகேடு வழக்குகளை அமலாக்கத் துறை சிறப்பாக கையாண்டு, பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து சொத்துகளைப் பறிமுதல் செய்தது குறித்து பல எடுத்துக்காட்டுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அக்ரிகோல்ட் குழுமத்தின் நிதி முதலீட்டு மோசடியில், அமலாக்கத் துறை மற்றும் ஆந்திர குற்றப் புலனாய்வுத் துறையின் நடவடிக்கையால் ரூ.6,000 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவா்களுக்குச் சேரவேண்டிய தொகை வழங்கப்பட்டது, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ், ஐஆா்இஓ குழுமத்தின் ரூ.1,777 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டது, பிட்கனெக்ட் மோசடி திட்டத்தில் சுமாா் ரூ.1,646 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது, பல்வேறு மாநிலங்களில் முதலீட்டாளா்களிடம் சுமாா் ரூ.17,000 கோடி வரை ரோஸ் வேலி குழும நிறுவனங்கள் மோசடி செய்ததில், பாதிக்கப்பட்டவா்களுக்கு அவா்களின் பணம் கிடைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என பல்வேறு எடுத்துக்காட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
