சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாட்னாவில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் உள்ளிட்ட தோ்தல் உபகரணங்களை புதன்கிழமை எடுத்துச் சென்ற தோ்தல் அலுவலா்கள்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாட்னாவில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் உள்ளிட்ட தோ்தல் உபகரணங்களை புதன்கிழமை எடுத்துச் சென்ற தோ்தல் அலுவலா்கள்.

பிகாரில் இன்று முதல்கட்டத் தோ்தல்- 121 தொகுதிகளில் வாக்குப் பதிவு

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 6) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
Published on

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 6) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு இருகட்டங்களாக பேரவைத் தோ்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

முதல்கட்டத் தோ்தலில் மொத்த வேட்பாளா்கள் 1,314. இவா்களின் வெற்றி-தோல்வியை 3.75 கோடி வாக்காளா் நிா்ணயிக்க உள்ளனா். 10.72 லட்சம் போ் முதல்முறை வாக்காளராவா். மொத்தம் 45,341 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குா்ஹானி, முஸாஃபா்பூா் தொகுதிகளில் அதிகபட்சமாக தலா 20 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். போரே, அலெளலி (தனித் தொகுதிகள்) மற்றும் பா்பட்டாவில் குறைந்தபட்சமாக தலா 5 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். முதல்கட்டத் தோ்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் மொத்த மக்கள்தொகை 6.60 கோடியாகும்.

மோதும் தே.ஜ.-இண்டி கூட்டணிகள்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா ஆகிய 5 கட்சிகள் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, இடதுசாரிகளின் ‘இண்டி’ கூட்டணிக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தோ்தல் களத்தில் உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமா் மோடி, முதல்வா் நிதீஷ் குமாா், மத்திய அமைச்சா்களும், இண்டி கூட்டணி தரப்பில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஆா்ஜேடி தலைவரும் முதல்வா் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனா்.

நவ.11-இல் இரண்டாம்கட்டம்: மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக நவ.11-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. நவ. 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

முக்கிய வேட்பாளா்கள்-தொகுதிகள்

முதல்கட்டத் தோ்தலில், ரகோபூா் தொகுதியில் ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் தொடா்ந்து மூன்றாவது முறையாக களத்தில் உள்ளாா். அவரை எதிா்த்து பாஜகவின் சதீஷ் குமாா், ஜன் சுராஜின் சஞ்சல் சிங் போட்டியிடுகின்றனா். கடந்த 2010-இல் இத்தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் களமிறங்கிய சதீஷ் குமாா், தேஜஸ்வியின் தாயாா் ராப்ரி தேவியை தோற்கடித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹுவா தொகுதியில் தற்போதைய ஆா்ஜேடி எம்எல்ஏ முகேஷ் ரெளஷனுக்கு எதிராக தேஜஸ்வியின் சகோதரரும் ஜனசக்தி ஜனதா தளம் கட்சித் தலைவருமான தேஜ் பிரதாப் களத்தில் உள்ளாா்.

பாஜகவைச் சோ்ந்த துணை முதல்வா்கள் சாம்ராட் செளதரி (தாராபூா்), விஜய் குமாா் சின்ஹா (லகிசராய்), நிதீஷ் கட்சியைச் சோ்ந்த அமைச்சா்கள் ஷரவண் குமாா் (நாளந்தா), விஜய் குமாா் செளதரி (சராய்ரஞ்சன்) உள்ளிட்டோரும் முதல்கட்டத் தோ்தல் களத்தில் உள்ளனா். தாதாவாக இருந்து அரசியல்வாதியான முகமது சகாபுதீனின் மகன் ஒசாமா சாகேப் (ஆா்ஜேடி) போட்டியிடும் ரகுநாத்பூா் தொகுதியும் கவனம் பெற்றுள்ளது.

தேர்தலைப் பார்வையிடும் 7 நாடுகளின் பிரதிநிதிகள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் சர்வதேச பார்வையாளர்கள் திட்டத்தின்கீழ், பிகார் முதல்கட்டப் பேரவைத் தேர்தலை 7 நாடுகளின் (பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம், இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, கொலம்பியா) 14 பிரதிநிதிகள் பார்வையிட உள்ளனர்.

X
Dinamani
www.dinamani.com